தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் ‘தலைவா வா! தரணி ஆள வா!’ என கோவை மாநகரின் பல பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை அதன் தொடர்ச்சியாக அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை இ-மெயில் மூலம் கட்சித் தலைமைக்கு ஏற்கெனவே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புகளின்போது, தனது முடிவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கியதாகத் தெரிகிறது.
நிதின் நபின், பி.எல். சந்தோஷ், அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அனைவருமே அவர் கட்சியில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். எனினும், தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 4-ம் திகதி அண்ணாமலையின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.










