விபத்தில் இளம் தாய் பலி: கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில், பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைக்கச் சென்ற தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உருத்திரபுரம் – கரடிப்போக்குச் சந்திக்கு இடைப்பட்ட பிரதான வீதியில் இன்று இளைஞர்கள் குழுவினர் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகச் செலுத்தி, ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வீதியால் பயணிக்கும் ஏனைய பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சாகசப் பயணம் தொடர்ந்த வண்ணமிருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், பாடசாலை முடிவடைந்த தனது பிள்ளையை வீட்டுக்கு அழைத்து வருவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது, சாகசத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த தாயின் மோட்டார் சைக்கிள் மீது மிகக் கொடூரமான முறையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக, அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சாகசக் குழுவைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles