‘அணிக்கு வேண்டாம் என ஒதுக்கினார்கள்’ – நேற்றைய போட்டியில் தனியாளாக சம்பவம் செய்த ஷசாங் சிங்

குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்திய இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களின் எதிர்காலத்தையே தலைகீழாக திருப்பும் ஒரு இடமாக எப்போதும் ஐபிஎல் இருந்துவருகிறது. எங்கோ ஒரு மூலையில் முகவரி தெரியாத கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள், ஐபிஎல்லில் இடம்பெற்று யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நம்பமுடியாத ஆட்டத்தால் ஹீரோவாக மாறுவார்கள்.

அந்தப் பட்டியல் இதுவரை ”ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் எனத்தொடங்கி ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங்” என நீண்டுகொண்டே செல்கிறது.

அந்தவகையில் வெறும் இரண்டு சுற்று போட்டிகளையே கடந்திருக்கும் 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை “மயங்க் யாதவ், ரகுவன்சி, போரெல், மணிமாறன் சித்தார்த்” முதலிய வீரர்கள் தங்களுடைய திறமையால் ஹீரோவாக மாறியுள்ளனர். அவர்களை தொடர்ந்து நேற்றைய போட்டியில் 32 வயதான ஷஷாங்க் சிங் என்ற பஞ்சாப் வீரர் தனியாளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தன்னுடைய திறமையால் உயர்ந்து நின்றுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 3 ஓவரில் 30 ரன்கள் அடித்திருந்த போது சாஹா அவுட்டாகி வெளியேற, காயத்திற்கு பிறகு அணிக்குள் வந்த வில்லியம்சன் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டிவிட்டார். ஆனால் 26 ரன்னில் வில்லியம்சனும் பெவிலியன் திரும்ப, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கில் மற்றும் சாய்சுதர்சன் இருவரும் பஞ்சாப் அணியின் பவுலர்களை பிரித்து மேய்ந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சாய்சுதர்சன் 173 ஸ்டிரைக்ரேட்டில் 6 பவுண்டரிகள் அடித்து மிரட்டிவிட, 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் கலக்கிப்போட்டார். 33 ரன்னில் சாய்சுதர்சன் வெளியேற, கடைசியாக களத்திற்கு வந்த திவேத்தியா 8 பந்தில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பஞ்சாப் கிங்ஸ் அணியை சிதறடித்தார்.

88 ரன்கள் இருந்தபோது நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை கில் எடுத்துவருவார் என நினைத்தபோது, 48 பந்தில் 89 ரன்களுடன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கில்லின் அபாரமான ஆட்டத்தால் 199 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது குஜராத் அணி.

200 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு எதுவுமே சரியாக செல்லவில்லை. இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்னில் போல்டாகி வெளியேற, 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை கொடுத்த பேர்ஸ்டோவும் 22 ரன்னில் போல்டாகி நடையை கட்டினார். தொடர்ந்து சாம் கரன் 5 ரன், சிக்கந்தர் ராசா 15 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, மோசமான நிலைக்கு சென்றது.

ஆனால் என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும், மறுமுனையில் போட்டியை விட்டுக்கொடுக்காத பிரப்சிம்ரன் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் விரட்டிக்கொண்டே இருக்க பஞ்சாப் கிங்ஸ் அணி ஏதோ ஒரு மூலையில் போட்டியை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. பிரப்சிம்ரனை 35 ரன்னில் வெளியேற்றிய நூர் அகமது போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பக்கம் திருப்பிவிட்டார்.

கடைசி 2 ஓவருக்கு 25 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்திற்கு போட்டிசெல்ல, மோஹித் சர்மா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர்களுடன் 18 ரன்களை விரட்டிய ஷஷாங் சிங் கிட்டத்தட்ட போட்டியை வென்றே விட்டார். கடைசி 6 பந்துக்கு 7 ரன்கள் என போட்டி மாற கடைசிவரை நிலைத்துநின்ற ஷஷாங் சிங் பஞ்சாப் அணியை ஒரு அசத்தலான வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

முக்கியமான நேரத்தில் கேட்ச்களை கோட்டைவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, போட்டியையும் கோட்டைவிட்டது. நம்பவே முடியாத ஒரு இடத்திலிருந்து போட்டியை வென்றுகொடுத்த ஷஷாங் சிங் ஆட்டநாயகனாக தேந்தெடுக்கப்பட்டார்.

தனியாளாக கெத்தாக போட்டியை வென்ற இந்த ஷஷாங் சிங்-ஐ தான், 2024 ஐபிஎல் ஏலத்தின் போது ”தவறாக எடுத்துவிட்டோம் இவர் எங்களுக்கு வேண்டாம்” என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கியது.

ஐபிஎல் ஏலத்தின் போது இரண்டு வீரர்கள் ஒரே பெயரில் இருந்ததால் தவறான ஷஷாங்கை எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் இவரை வேண்டாம் என மறுத்துவிட்டது. 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் என இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்தனர், நாங்கள் 19 வயது ஷஷாங் சிங்குக்கு பதிலாக 32 வயது வீரரை எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்க்ஸ் நேற்றைய போட்டியின் ஹீரோவான ஷஷாங்கை ஏற்க மறுத்தது.

பின்னர் எடுத்துவிட்டோம் எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது என்ற பதிவை கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டது. அந்த பதிவிற்கு பதிலளித்த 32 வயது ஷஷாங், என் திறமை மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என தெரிவித்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் வேண்டாம் என மறுக்கப்பட்டவர் தான், இன்று அந்த அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles