இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் 9 மணிக்கு பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்சுற்று வாக்கெண்ணலின்போது, செல்லுபடியான மொத்த வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறாததால் 2 ஆம் சுற்று வாக்கெண்ணும் பணி இடம்பெற்றது. இதற்கமைய அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
தேர்தல்ஆணைக்குழுவில் நேற்றிரவு விசேட கூட்டமொன்று நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதி தேர்தலில் அநுர வெற்றிபெற்றுள்ளமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுர நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவ்வுரையிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி விளக்கமளிக்கவுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, இந்த வெற்றியை அனைத்து இலங்கையர்களும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தில் பிரதம அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளது. எனினும், அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அறியமுடிகின்றது.