உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உயர்நீதின்றில் வழக்கு தொடுப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கட்கிழமை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது. மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைந்து அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்டத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளோம்.

முதலாவது மனுவை சுதந்திர மக்கள் காங்கிரஸ் சார்பில் நானும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தாக்கல் செய்துள்ளோம். இரண்டாவது மனுவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தாக்கல் செய்துள்ளார்கள்.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முன்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களும் புதிதாக ஸ்தாபிக்கப்பட வேண்டும், அவ்வாறாயின் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தேர்தலை உரிய காலத்தில் நடத்த சட்டத்தின் ஊடாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு கிடையாது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளினால் மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே உள்ளூராட்சி மன்ற சபை தேர்லையும் பிற்போட இடமளிக்க முடியாது.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles