ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில்
வெலிமடை கல்வி வலயம் சம்பியன் பட்டம் வென்றது.
2026 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டியின் வலயச் சம்பியன் பட்டத்தை 698.5 புள்ளிகளுடன் வெலிமடை கல்வி வலயம் கைப்பற்றியது.
பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில், ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
அனைத்து வலயங்கிடையிலான போட்டியில் 532.5 புள்ளிகளுடன் பதுளை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், 496.5 புள்ளிகளுடன் பண்டாரவளை கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
கல்வி கோட்டச் சம்பியன் பட்டத்தை 503.5 புள்ளிகளுடன் பதுளை கல்விக் கோட்டம் வென்றது. 377 புள்ளிகளுடன் பண்டாரவளை கல்விக் கோட்டம் இரண்டாம் இடத்தையும், 365 புள்ளிகளுடன் ஊவா பரணகம கல்விக் கோட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றது.
போட்டியின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மொனராகலை ராஜகீய வித்தியாலயத்தின் ஆர். எஸ். ரஷ்மி பிரபோத்யா தெரிவு செய்யப்பட்டார். சிறந்த விளையாட்டு வீரராக பதுளை தர்மதூத வித்தியாலயத்தின் எம். எச். எம். சஃபாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
நிறைவு நிகழ்வில் பதுளை மாநகர முதல்வர் நந்தன ஹப்புகொட, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், கல்வி வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
பசறை நிருபர்










