சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரிடம் முப்பது ஆயிரம் ரூபா பணத்தினை இலஞ்சமாக பெற்றுகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரைக்கும் விளக்க மறியலில் வைக்கும் படி கெக்கிராவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கெக்கிராவ இப்பலோகம பொலிஸ் நிலையத்தின் மது ஒழிப்பு பிரிவில் கடமை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, இப்பலோகம பகுதியில் கசிப்பு வடிசாராயம் உற்பத்தி செய்யும் நபர் ஒருவரிடம் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாக இலஞ்சம் பெற்று வந்துள்ள நிலையிலேயே 08 ஆம் திகதி மாலை இப்பலோகம பகுதியில் வைத்து குறித்த வியாபாரியிடம் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் 30 ஆயிரம் ரூபா பணத்தினை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் போது இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
