இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதிபெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் 13 ஆயிரத்து 424 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி இருந்தனர். எனினும், 39 பேர் மாத்திரமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் ஒரு வேட்பாளர் உயிரிழந்துவிட்டார்.
எனவே, போட்டியில் 38 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு வேட்பாளர்களே பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
மக்கள் போராட்டம் நடைபெற்ற பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதுமட்டுமல்ல பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் உட்பட கடந்தகாலங்களைவிட முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே இம்முறை தேர்தல் நடைபெறுகின்றது.
தேர்தல் தினத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி முடிவு அறிவிக்கப்படும்வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய வகையில் செயற்படும். அதன்பின்னரான காலப்பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கை தொடரும்.
பிற்பகல் 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் உரிய ஏற்பாடுகளுக்கமைய வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.