‘தமிழ் எம்.பிக்களின் போராட்டம் ஜெனிவாவுக்கான சூழ்ச்சி’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசுக்கு எதிரான கருத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்தித்து மகஜரை கையளிக்க வேண்டும் என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக முன்னறிவித்தல் வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயற்றிட்டமொன்றுக்காக ஜனாதிபதி இன்று(24) முற்பகல் சென்றதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தமது அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான தவறான கருத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சியாக கருதுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles