” அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களின் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவர்களின் நலன்களை பேணாத அரசாங்கம், தனியார் கம்பெனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்கள் குறித்து பேசி வருவது வேடிக்கையான விடயமாகும்.
அரசாங்கம் இத்தகைய பித்தலாட்ட நிலைமைகளைக் கைவிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதில் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டங்களும், தொழிலாளர்களும் இன்று மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் இவற்றிலிருந்தும் மீட்டெடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பு காணப்படுகின்றது. இல்லையேல் தோட்டங்களினதும் இருப்பு கேள்விக்குறியாகும்.
சுதந்திரத்திற்கு முன்னும்சரி சுதந்திரத்திற்கு பின்னும்சரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவற்றுள் பொருளாதாரச் சவால் மிகவும் முக்கியமானதாகும். இச்சவால் காரணமாக மலையக சமூகத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை வரலாற்றில் தோட்டத் தொழிலாளர்கள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. இனியும் இந்த வரலாற்றினைத் தொடர விடுவதா? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்து பேசப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இந்த இரண்டு அரசாங்கங்களுக்கும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் உண்மையான மனப்பாங்கு இருக்கவில்லை.
தேர்தல் காலங்களில் மேலெழும்பும் கோஷங்களும் கோரிக்கைகளும் பின்னர் கீழிறங்கிப் போவது வரலாறாகும். இதுவே இம்முறையும் நடந்தேறி இருக்கின்றது. ஆயிரம் ரூபா என்பது பேச்சளவில் முற்றுப்பெற்றுள்ளது. கம்பெனிகளுடன் எவ்விதமான கலந்துரையாடல்களிலும் ஈடுபடாத அரசாங்கம், வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போவதாக உறுதியளித்திருந்தது. எனினும் இந்த வாக்குறுதியின் நம்பகத்தன்மையை பெருந்தோட்ட மக்கள் இப்போதுதான் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலை நாட்கள் குறைவாக வழங்கப்படுகின்ற நிலையில் வேலை நாட்களுக்குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதிலும் இழுபறிநிலை காணப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இவற்றை தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டாத அரசாங்கம், கம்பெனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்கள் குறித்து பேசி வருவது வேடிக்கையான விடயமாகும். அரசாங்கம் இத்தகைய பித்தலாட்ட நிலைமைகளைக் கைவிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவது குறித்து இதயசுத்தியுடன் செயற்படவேண்டும்.
சமகால வாழ்க்கை நிலைமைகளை கருத்தில்கொண்டு நோக்குகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாவையேனும் நாளாந்தம் வழங்குதல் வேண்டும். ஆனால் ஆயிரம் ரூபாவுக்கே இழுபறியாக இருப்பது வேதனைக்குரியதாகும் என்றார்.
-ஊடகப்பிரிவு-
