பசறை, 13வது மைல் கல்லருகே விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதியும், விபத்திற்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொறியின் சாரதியும், பசறை நீதிவான் நீதிமன்றத்தில் 01-04-2021 நேற்று பிற்பகல் பசறைப் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்தப்பட்ட பஸ் சாரதியை, எதிர்வரும் 8ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும், லொறிச் சாரதியை ஐந்து இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரரப்பிணைகளில் விடுவிக்கும்படியும், பசறை நீதிவான் நீதிபதி சமிந்த கருணாதாச உத்தரவிட்டார்.
அத்துடன் நீதிபதி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட லொரிச் சாரதியை, எதிர்வரும் 8ந் திகதி மீளவும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்தார்.
கடந்த 20ந் திகதி காலை, பசறை 13வது மைல் கல்லருகே மேற்படி தனியார் பஸ் விபத்திற்குள்ளாகியது. இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகினர். இவர்கள் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களில் ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதி மீது, பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதால், அது தொடர்பான தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறைப் பொலிசார், நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பொறுப்பற்ற வகையில் பஸ்சை செலுத்தியமை, கையடக்கத் தொலைபேசியை பாவித்தமை, கடும் வேகம், சாரதி அனுமதிப்பத்திரமின்மை, பஸ் சேவை கால அட்டவணைக்குப் புறம்பாக பஸ்சை செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்தும், பசறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம். செல்வராஜா, பதுளை










