புனர்வாழ்வு சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.
” ஜெனிவா மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இலங்கைக்கு ஏற்பட்டது அவமான தோல்வியாகும். இதற்கு முன்னர் எமக்கு எதிரான பிரேரணையில் 11 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. எனினும் இம்முறை அது ஏழாக குறைவடைந்துள்ளது. அதேபோன்று வாக்களிப்பில் கடந்த முறை 24 நாடுகள் நடுநிலையாக இருந்தபோதும் இம்முறை அது 20 நாடாக குறைவடைந்துள்ளது.
அதேபோன்று இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் மூலம் எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தது அவ்வாறான எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. சீனா எமக்கு ஆதரவளிக்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்த விடயம்.
மேலும் ஜெனிவாவில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டுகள் முதல் தடவையாக கொண்டுவரப்பட்டதாகும்.
எமது நடவடிக்கைகள் காரணமாகவே நாம் தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ளோம். புனர்வாழ்வு சட்ட மூலம் பயங்கரவாத தடைச்சட்டம், இனவாத செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும். புனர்வாழ்வு சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியன உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த விடயங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.” – எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.










