புஸல்லாவையில் பெண் கொலை – சந்தேகநபர் நுகேகொடையில் கைது!

புஸ்ஸல்லாவையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணினிப் பொறியியலாளரான அவரது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை – விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எல்பொட – கட்டுகித்துல பகுதியைச் சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா என்ற 25 வயதான பெண் புஸ்ஸல்லாவ – சோகம தோட்டப்பகுதியில் உள்ள புதரொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

தாலிக் கயிறால் கழுத்து நெரித்து அவர் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும், இருவரும் களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தத் தம்பதியினர் கொழும்பில் இருந்து கட்டுகித்துல பகுதிக்குச் சென்றிருந்த போது, புஸ்ஸலாவை நகரில் வைத்து சந்தேகநபரான கணினிப் பொறியியலாளருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளார் என அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

Related Articles

Latest Articles