போர் காலத்திலும் பொருளாதாரத்தை பலப்படுத்தியவர்கள் நாங்கள் – மஹிந்த பெருமிதம்!

” பிரபாகரனுடன் எந்தவொரு தலைவரும் நேருக்கு நேர் போரிட்டதில்லை. ஆனால் நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்து ஈழம் அமைவதை தடுத்தோம். போரை அடுத்த தலைவருக்கு விட்டுவைக்கவில்லை. ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மஹிந்த ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,

” 2005 ஆம் ஆண்டு நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோதும் சேறுபூசினர். ஆனால் நாடு பிளவுபட்டு ஈழம் அமைவதை தடுக்குமாறு மட்டுமே மக்கள் எம்மிடம் கோரினர். பிரபாகரனுடன் நேருக்கு நேர் போரிட தலைவர்களுக்கு முடியாமல் இருந்தது. சில தலைவர்கள், பிரபாகரனுக்கு ஆயுதங்களைக்கூட வழங்கினர். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினரை பிரபாகரன் கொன்றார். அப்பாவி மக்களைக் கொன்றார். அவ்வாறு இருந்த போரை அடுத்த தலைவருக்கு நாம் விட்டுவைக்கவில்லை.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் சமாதானத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தினோம்.

போர் காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்களே இன்று இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு அன்று நிலவிய சூழ்நிலை தெரியாது. அவர்களின் பெற்றோர் சுதந்திரமாக தொழிலுக்கு செல்ல முடியாமல் இருந்தது. காலையில் சென்றால் மாலையில் வீடு திரும்புவோமா என்பது சந்தேகமாகவே இருந்தது. இதனை மறந்துவிட்டனர். இளைஞர்களைக் குற்றஞ்சாட்ட முடியாது, அவர்களை ஏமாற்றி, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற முற்படுபவர்களும் உள்ளனர். இவர்கள்தான் சமாதானத்தை ஏற்படுத்திய இராணுவத்தினரைக்கூட ஏளனப்படுத்துகின்றனர். சர்வதேச பிடிக்குள் சிக்கியுள்ளனர். அதனால்தான் அன்றுபோலவே இன்றும் எமது நாட்டுக்கான அழுத்தங்கள் குறையவில்லை எனக் கூறுகின்றோம்.

மக்கள் முன்னிலையில் எம்மை குற்றவாளியாக்க வானுக்கும், பூமிக்கும் முடிச்சு பூடுகின்றனர். போருக்கு மத்தியிலும் நாம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினோம். 2014 இல் பொருளாதார வளர்ச்சி 6.8 வீதுமாக இருந்தது. 2015 இல் மாற்றத்தைக் கோரினர். ஆனால் பொருளாதாரம் மறை பெறுமதிக்கு வந்தது.

நாம் கொரோனா சவாலை எதிர்கொண்டோம். பொருளாதார சவாலையும் எதிர்கொண்டோம். அவ்வாறான சூழ்நிலையிலேயே மக்கள் தூண்டப்பட்டனர். அதன் பின்னர் நடந்தவை தெரியும்.

சிலர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னரே ஆடைகளை தைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் சவாலை ஏற்பதற்கு அவர்கள் தயார் இல்லை. இப்படியான தலைவர்களுக்கு நாட்டை வழங்கக்கூடாது.

குறுகிய காலத்துக்குள் இந்நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய கட்சியே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். அடுத்த தேர்தலில் எமது முகாமை பலமான சக்தியாக திகழும். இந்நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கமாட்டோம். எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். அறகலய ஊடாக இல்லாமல்போக போன நாடு, மக்கள் வழங்கிய ஆணையால்தான் தடுத்து நிறுத்தப்பட்டது.

எமது கரங்கள் இரத்தம் படிந்த கரங்கள் அல்ல. நாட்டுக்கு தேவையான புதிய பயணம் ஆரம்பமாகும். புதிய பயணத்துக்கான அனைத்து இன மக்களையும் அழைக்கின்றேன். ” – என்றார்.

Related Articles

Latest Articles