ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் மொறட்டுவ மாநகரசபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்குமிடையில் இடம்பெற்ற காரசாரமான கலந்துரையாடல் தொடர்பான காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகி – மொட்டு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான தகவல்களை கடந்தவாரம் வழங்கியிருந்தோம்.
மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமன்லால் பெர்னாண்டோவை பலிகடாவாக்கி, ராஜபக்ச குடும்பத்துக்கு வெள்ளையடிப்பு செய்யும் நோக்கிலேயே இந்த காணொலி கசியவிடப்பட்டது எனவும், இது திட்டமிட்ட அடிப்படையிலான நாடகம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த காணொலி வலைத்தளங்களில் வைரலான பின்னர் சமன் லாலின் மகன், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தொடர்புகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் எங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர். நானும், எனது தந்தையும் ஊடக சந்திப்பை நடத்தி – உண்மையைக் கூறிவிட்டு கட்சியை விட்டு ஒதுங்குகின்றோம்.” என்று சமன்லாலின் மகன் கூறியுள்ளார்.
“ தம்பி அவசரப்படாதே, எல்லாம் சரிவரும். நாங்கள் இருக்கின்றோம்.” என சனத் நிஷாந்த ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு சனத் நிஷாந்த தெரியப்படுத்தியுள்ளார். நாமலின் ஆலோசனைப்படி சமன் லாலின் வீட்டுக்கு நேரில் சென்று, ஆறுதல் கூறினார் சனத் நிஷாந்த.
அதன்பின்னர் மஹிந்த ராஜபக்சவை தொடர்புகொண்ட சமன் லால் பெர்ணான்டோ,“ சேர், மனம் நொந்துபோய் உள்ளேன். கூட்டத்தில் உண்மை நிலைவரத்தைதான் எடுத்துரைத்தேன். ஆனால் பஸில் ராஜபக்ச என்னை கடுமையாக விமர்சித்துவிட்டார்.” என கூறி முடிப்பதற்கு முன்னரே,
“ தம்பி, யாவும் அறிந்தேன். அவசரப்பட வேண்டாம். நான் சமரசப்படுத்தி வைக்கின்றேன்.” என்கூறி அழைப்பை துண்டித்தாராம் மஹிந்த.
