ஹப்புத்தளை – தம்பேதன்னை பிரதான வழியில் அமைந்துள்ள குறிஞ்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் உடைக்கப்பட்டு, அம்பிகைக்கு அணியப்பட்டிருந்த பெறுமதிமிக்க தங்கச் சங்கிலி மற்றும் உண்டியல்கள் இரண்டும் உடைக்கப்பட்டு, அவற்றிலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் ஆகியனவும் திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 1 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக, ஹப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவம் குறித்து, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று 07-06-2022 கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளாந்த பூஜைகளை நிறைவு செய்துவிட்டு, வழமைபோன்று தேவஸ்தான கதவினை பூட்டிவிட்டு, குருக்கள் தமது வீடு சென்றுள்ளார். மறுதினமான நேற்றுகாலை குருக்கள் தேவஸ்தானத்தை திறக்க முற்பட்ட போது, தேவஸ்தானம் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, அயலவர்களிடம் கூறி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இம் முறைப்பாட்டை அடுத்து, ஹப்பத்தளைப் பொலிசார் மோப்ப நாய்களுடன் சென்று, அப்பகுதியில் இயங்கிய சீ. சீ. டி.வி கெமராவின் காட்சிகளுடன் ஆய்வுப் பரிசீலனைகளை மேற்கொண்டனர். இதற்கமைய அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரை பொலிசார் கைது செய்தனர். அவ்வேளையில் அப்பகுதி தோட்ட மக்கள் அனைவரும் கூடி, கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரைத் தாக்க முற்பட்ட வேளையில், அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
பொலிசார் வெகு சிரமத்தில் மத்தியில், கூடியிருந்த மக்களை அகற்றி, அமைதி நிலையை ஏற்படுத்தினர். பின்னர் கைது செய்த இளைஞனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இத் திருட்டுச் சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரனைகளை மேற் கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் தேடப்பட்டும் வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிசார் தெரிவித்தனர்.
