மினுவங்கொட பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரை மினுவங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவங்கொட பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிபுண கருணாரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பேரில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான மேற்படி குடும்பப் பெண் ஹெரோயின் போதைப்பொருளை சிறிய பக்கட்டுக்களில் அடைத்து மினுவங்கொட, பன்சில்கொட மற்றும் கலவான ஆகிய பிரதேசங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வருவதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் தனது வீட்டில் வைத்து இளைஞரொருவருக்கு ஹெரோயின் போதைப்பொருள் அடைக்கப்பட்ட பக்கட்டொன்றை 1500/= ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போதே பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது சந்தேக நபர் தனது ஆடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 5040 மில்லி கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
