அமெரிக்க போர்க் கப்பல்களை குறிவைக்கும் ஈரான்: மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீது மீண்டும் பாரிய தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

போரின் ஆரம்பத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட விரிவான குண்டுவீச்சுத் தாக்குதலான ‘எபிக் பியூரி’ (Epic Fury) நடவடிக்கையை மீண்டும் முன்னெடுப்பதற்கான சாத்தியம் குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் ஊடாக தெஹ்ரான் மீதான அழுத்தத்தைத் தொடர்ந்து பேணுவதா என்பது குறித்து முன்னதாகவும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைப் பணியாளர் அலி அப்தொல்லாஹி, ஈரானின் பிராந்திய இலக்குகளைத் தாக்கும் திறன் காரணமாக, அமெரிக்கக் கடற்படையால் ஈரானின் கடல் எல்லைக்குள்ளோ அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கோ மீண்டும் நுழைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி, தமது படையினரும் இராணுவமும் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்குள் நுழைவதை ஒரு கனவாக மட்டுமே காண முடியும். அந்த ஆசையுடனேயே அவர்கள் இறுதிவரை இருக்க வேண்டியிருக்கும்” என அரச ஊடகங்கள் சனிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் அப்தொல்லாஹி குறிப்பிட்டுள்ளார்.

போரில் ஈரானின் இராணுவத் திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களையும் அவற்றுக்கு ஆதரவான கப்பல்களையும் ஈரானியப் பிராந்தியத்துக்கு அருகில் கொண்டுவரத் தயங்குவது முரண்பாடானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, எட்டு மாதங்களாக நீடிக்கும் போர் பிராந்தியம் முழுவதும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்தொல்லாஹி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles