“பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை.” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ஹர்மான் தெரிவித்தார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ஞானசார தேரருக்கு ஆதரவில்லாத சிங்கள மக்கள்கூட அவரின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து அதிருப்தியில் உள்ளனர். துறவற ஆடை என்பது மதத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
இவ்விவகாரம் பற்றியே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கதைத்து வருகின்றார். மாறாக பொது மன்னிப்பு வழங்குமாறு அவர் கோரவில்லை. கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலும் இது பற்றி அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, இனவாத சக்திகள் காத்துக்கொண்டிருந்தன. அந்த சக்திகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரசாங்கம் துருப்பொன்றை வழங்கிவிட்டது. இந்நாட்டில் இனவாதம் இன்னும் ஒழியவில்லை. அது ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறான விடயங்களில் வெளிக்கிளம்பும்.”- என்றார் முஜிபுர் ரஹ்மான்.
…….
செம்மணியில் உறவுகள் பெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 583 மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்தவித முறையான மரபணுப் பரிசோதனைகளோ அல்லது தடயவியல் ஆய்வுகளோ இன்றியும், அதனை ஒரு மனிதப் புதைகுழி எனக் குறிப்பிடாமலும் நீதிமன்றத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் கொக்குத்தொடுவாய் மற்றும் சதொ ச மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடப்பட்டது போன்று செம்மணியும் மூடப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இதில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்களின் நேரடிப் பங்களிப்புடன் மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இனப்படுகொலையின் மிகப்பெரிய சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிக்கு உரிய சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குச் செம்மணிப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச நீதி கோரும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
…….
தேசிய மட்ட தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் தியகம மைதானத்தில் நடத்தப்பட்டுவரும் இந்தப் போட்டிகளிலேயே மேற்படி மாணவன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் பிரிவில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வினோதன் விகாஷ் கலந்துகொண்டார்.
இந்தப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தட்டினை 43.58 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
மாணவனின் இந்தச் சாதனைக்குப் பயிற்றுவிப்பாளர் வ. ஹரிகரன் முறையான பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
………..
ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி? – ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் பொய்யானவை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியதுடன், இணையத்தில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தகவல்களின் உண்மைத்தன்மையை உத்தியோகபூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தாமல் அவற்றைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
…………
முதலைத் தாக்குதலில் 12 வயது பாடசாலை மாணவன் பலி!

கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனேருவ பகுதியில் அமைந்துள்ள வம்பட்டுவெவ குளத்தில் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மனேருவ மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது, குளிப்பதற்கான படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவனை, குளத்தில் பதுங்கியிருந்த முதலை திடீரென கவ்விப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, மாணவனின் சடலத்தை குளத்திலிருந்து மீட்டுள்ளனர்.
இதே குளத்தில் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழப்பது இது இரண்டாவது முறையெனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதே குளத்தில் முதலைத் தாக்குதலுக்கு உள்ளான வயது வந்த ஒருவர் தனது கையின் ஒரு பகுதியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
…………
மாத்தறையில் 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

மாத்தறை, தலல்ல, நவதுன்ன கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையும் கடலோரக் காவல் படையும் இணைந்து இன்று (24) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடலோரக் காவல் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடற்கரையிலிருந்து 21 சாக்குப் பைகள் மற்றும் பயணப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 200 பொதிகளில் அடைக்கப்பட்ட 200 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 பொதிகளில் அடைக்கப்பட்ட 257 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
97 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த ஆண்டில் மீட்பு
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர, ‘ஒன்றிணைந்த தேசம்’ (A Nation United) என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கு ஆதரவாக, இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டில் கடற்படையும் கடலோரக் காவல் படையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், வீதிச் சந்தை மதிப்பின்படி சுமார் 97 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதைத் தடுக்கும் நோக்கில், முப்படையினர், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, விசேட அதிரடிப் படையினர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இணைந்து தொடர்ந்து நடவடிக்கடத்தல் தொடர்பான தகவல்களை 1818 அல்லது 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்கி, சட்ட அமுலாக்கப் பிரிவுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, கடலோரக் காவல் படை, புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
………….
மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து: சிப்பாய் பலி; 11 பேர் காயம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பனை மரத்துடன் மோதியதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சனிக்கிழமை (ஒக்டோபர் 24) கிளியன்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவ வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் பயணித்த 12 இராணுவச் சிப்பாய்களும் காயமடைந்த நிலையில், பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏனைய 11 பேரும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மன்னாருக்குச் சென்றிருந்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, காயமடைந்த இராணுவச் சிப்பாய்களைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
……….










