இத்தாலி முதல் இந்தியா வரை: சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணம் நூலாகிறது

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான தனது காதல் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்சோனியா காந்தி, முதன்முறையாக ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

1965ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள சிறிய கிரேக்க உணவகம் ஒன்றில் ராஜீவ் காந்தியை முதன்முதலாகச் சந்தித்த அனுபவத்தை அவர் காணொளி மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்தச் சந்திப்பின்போது ராஜீவ் காந்தியின் தோற்றமும், மென்மையான குணமும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பொதுவான நண்பர் ஒருவர் இருவரையும் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் நண்பர்களாகி, ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல இடங்களுக்குச் சென்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

“கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில்தான் எனது காதல் பயணம் தொடங்கியது. ராஜீவும் நானும் அன்பு, சிரிப்பு மற்றும் நினைவுகளால் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கினோம். நவம்பர் 10ஆம் திகதி அந்த உலகத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய ‘Belonging: A Journey of Love’ என்ற அவரது சுயசரிதை நூல் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்நூலில் இத்தாலியில் அவர் கழித்த சிறுவயது, ராஜீவ் காந்தியுடனான காதல் மற்றும் திருமண வாழ்க்கை, குடும்பத்தில் நேர்ந்த இழப்புகள், இந்திய அரசியலில் அவர் வகித்த பங்கு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னதாக, ஒக்டோபர் 22ஆம் திகதி சோனியா காந்தி ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத் தளத்திலும் இணைந்து, தனது நூலின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவின் மூலம், ராஜீவ் காந்தியுடனான தனது காதல் வாழ்க்கையின் தொடக்கத்தைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles