குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு” என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது.
ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே மேற்படி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
மேலும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த புதிய பதற்றநிலையானது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் விமான நிலையத்தின் மீதான ஈரானிய தாக்குதலில் உயிரிழந்த நபர் இந்திய பிரஜையென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, மேலும் பல இந்தியப் பிரஜைகளும் இதில் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










