மலையகத்தில் 199 வருடங்களாக புனரமைக்கபடாமல் உள்ள வீதி – எப்போது விடிவு பிறக்கும்?

199 வருடங்களாக புனரமைக்கப்படாத பாதையொன்று கம்பளை பிரதேசத்தில் இருப்பதை வெளிக்கொண்டுவரவும், ஐநூறு குடும்பங்களுக்கு மேல் தினமும் பயன்படுத்தும் குறித்த வீதியினை புனரமைத்து தராமல், இம்முறை வாக்கு கேட்டு ஊர் பக்கம் வர வேண்டாம் என வலியுறுத்தியும் பிரதேச வாசிகள் கூடி கவனயீர்ப்பு போராட்டமொன்ற (05.02.2023 மாலை) அன்று மேற்கொண்டனர்.

இலங்கையில் முதல் முறையாக 1824 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பர்ட் என்பவரினால் கம்பளை சிங்ஹாப்பிட்டியவில் கோப்பி பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டபோது, கோப்பி பயிர்களை அங்கிருந்து கம்பளை நகருக்கு எடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் தூரம் கொண்ட மேற்படி பாதை இதுவரையில் புனரமைக்கப்படவில்லை.

இப்பிரதேசத்தில் இருந்து தினமும் ஐயாயிரம் கிலோகிராம் வரை பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்து மற்றும் கோப்பி கிராம்பு மிளகு போன்ற விவசாய உற்பத்தி பொருட்கைளையும் இப்பாதையூடாகவே கம்பளை நகருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பாதை சீர்கேடு காரணமாக கோப்பி பயிர் செய்யப்பட்ட காலத்தில் ஜோர்ஜ்பர்ட் தங்கியிருப்பதற்காக கட்டப்பட்ட பங்களா வீடும் சிதைந்து கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் சுட்டிக்காட்டினர்.

மேலும் தாங்கள் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதையினை புனர் நிர்மாணம் செய்யக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரையில் கவனம் செலுத்தவில்லை ஆகவே இப்பாதையினை உடனடியாக புனர் நிர்மாணம் செய்யாவிட்டால் இம் முறை மட்டுமல்ல இனிவரும் எந்த ஒரு தேர்தலிலும் தாங்கள் வாக்களிப்பதனை தவிர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் மேலும் குறிப்பிட்டனர் .

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles