13 ஐ முழுமையாக அமுலாக்கவும் – கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாத்துக்கும் வகையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட அமர்வில் உரையாற்றிய சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த்,

” இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. அதை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கம் மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும். இந்தியாவும் இதையே வலியுறுத்தி வருகின்றது.

சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துவதற்கான விடயங்கள் 13 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன. காலி, களுத்துறை முதலான சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மாகாண சபையில் உறுப்பினர்கள் தெரிவாகி பிரதேச அபிவிருத்திக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு, சுமார் 4 வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மலையக மக்கள் நாடு பிளவு படுவதை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் தலைவர்களும் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினையை ஆதரித்ததில்லை.

எனவே, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும், சமூக பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles