3 நாட்களுக்குள் ஈரான்மீது 2ஆவது முறையும் அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை (One-way attack drones) தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது.

Bandar Abbas தளத்திலிருந்து ஐந்தாவது ட்ரோன் ஏவப்படவிருந்த இறுதி நிமிடத்தில், அந்தத் தளம் மீது இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இத்தாக்குதலால் அந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று மாதங்களாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கி, உலகளாவிய எரிசக்தி விலைகளை உச்சத்திற்கு கொண்டு சென்ற போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்தமும் நடைமுறையில் உள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காகவே நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறினாலும், இது தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்ட அறிக்கையில்,

“இந்த நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்கானவை மற்றும் போர்நிறுத்தத்தை நிலைநிறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles