ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்பிசி நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ரேடார்களில் சிக்காமல் பறக்கும் ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் மற்றும் அதிதூர இலக்குகளைக் கண்காணிக்கும் ரேடார் அமைப்புகளை ஈரானுக்கு சீனா வழங்கியதாக நம்பப்படுகிறது.
இத்தகைய நவீன கருவிகள் மூலம், அமெரிக்காவின் எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள் போன்ற அதிநவீன போர் விமானங்களை ஈரானால் துல்லியமாகக் கண்காணிக்க முடிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இவ்வாறு என்.பி.சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘‘அமெரிக்கப் போர் விமானமானது தோளில் இருந்து ஏவப்படும் ‘மேன்பேட்ஸ்’ வகை ஏவுகணையால் தாக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த ஏவுகணை சீன தயாரிப்பு என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்று, தாழ்வாகப் பறக்கும் விமானங்களைத் தாக்கப் பயன்படுத்தும் இந்த சிறிய ரக ஏவுகணைகள் பொதுவாக 7 அடி நீளமும், 40 பவுண்ட் எடையும் கொண்டவை ஆகும்.










