72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

தேனியில் திரண்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நேற்று (ஜூன் 10) உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த மாவட்டமான தேனிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்பு கொடைக்கானல் பிரிவு சாலை (காட் ரோடு) அருகே உள்ள அவரது பண்ணை வீட்டின் முகப்பில் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்று இரணடு வழிகள் ஏற்படுத்தப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் அவரதுஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கும்பல் கும்பலாக திரண்டு வந்தனர்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு பாரதிராஜாவின் மகள் ஜனனி உள்ளிட்ட உறவினர்கள் நீர்மாலை எடுத்து வந்தனர். பின்பு பாரதிராஜாவின் உடல் தூய்மைப்படுத்தப்பட்டு இறுதிச் சடங்கு பணிகள் தொடங்கின. மூங்கில் பாடை கட்டி அதில் பாரதிராஜாவின் உடலை அடக்கம் செய்யும் இடத்துக்கு தூக்கி வந்தனர். இதன் முன்பாக போலீஸாரின் அணிவகுத்து வந்தனர்.

தொடர்ந்து அமைச்சர்கள் சிடிஆர்.நிர்மல்குமார், வன்னியரசு ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு 3 சுற்றுகளில் 72 குண்டுகள் முழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு பணிகள் நடந்தன. உறவினர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Articles

Latest Articles