உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரச ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது Truth Social பக்கத்தில் ட்ரம்ப் இன்று (12) வெளியிட்டுள்ள பதிவில்,
ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் முற்றிலும் பொய்யான செய்திகள் என்றும், எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானியர்கள் கையாளுவதற்கு மிகவும் கண்ணியமற்ற மனிதர்கள். அவர்களிடம் நேர்மையான முறையில் ஒப்பந்தம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ட்ரம்ப் காரசாரமாகச் சாடியுள்ளார்.
ஈரான் அரசு ஊடகமான IRNA , இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் 7 முக்கிய அம்சங்கள் என சில விபரங்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே டிரம்ப் இந்தத் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
ஈரான் வெளியிட்ட 7 முக்கிய அம்சங்கள்
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து புதிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 60 நாட்களுக்குப் பிறகே புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க ஈரான் உடன்படவில்லை என்றும், இந்த ஆரம்பகட்ட ஒப்பந்தம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதுடன் மட்டுமே தொடர்புடையது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான், ஓமான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களின் ஒரு பகுதி விடுவிக்கப்படும் என்றும், மீதமுள்ள சொத்துக்களை விடுவிப்பது, தடைகளை நீக்குவது மற்றும் போர்ச் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்துப் பின்னொரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பும் அவரது உயர்மட்ட அதிகாரிகளும் ஈரானுக்கு அச்சுறுத்தல் விடுப்பதும், மறுபுறம் ஒப்பந்தம் மிக அருகில் உள்ளது எனக் கூறுவதுமாக மாறி மாறிச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்காவும் ஈரானும் இரு நாட்கள் பரஸ்பர வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டன.
எட்டப்பட்ட ராஜதந்திர முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை நடத்தவிருந்த மூன்றாவது நாள் திட்டமிட்ட தாக்குதல்களை நிறுத்தியதாக டிரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










