60 நாட்களில் இறுதி ஒப்பந்தம்: அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை, நேர்மறையான மற்றும் முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான கத்தாரும் ,பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கியது.

இந்நிலையில் இது தொடர்பில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில்,

இரு நாடுகளின் உயர்நிலைக் குழு, அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வழிகாட்டி வரைபடத்திற்கு (Roadmap) ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

“ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் லெபனானில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவது குறித்து ஈரானிடமிருந்து வந்த குழப்பமான கருத்துகளுக்குத் தெளிவு காண்பதிலேயே தற்போதைய விவாதங்கள் கவனம் செலுத்தின.” என்று கலந்துரையாடலில் பங்கேற்ற அமெரிக்க தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதையும், தவறான புரிதல்களால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதையும் உறுதி செய்ய இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பிரத்யேக “தொடர்பு வழித்தடம்” (Communication line) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்தியஸ்த நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது மற்றும் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அதன் பிறகும் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்தன. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்படப் பல லெபனானியர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த மோதல் சூழல் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே புதிய போர்நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. எனினும், தொடர்ந்து மோதல்கள் நீடித்ததால், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் சனிக்கிழமை அறிவித்தது .

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுவிட்சர்லாந்தில் நேற்று சந்திப்பு நடைபெற்று, சாதகமாக முடிவடைந்துள்ளது.

அமெரிக்கத் தரப்பில், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் , டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரான் தரப்பில் சபாநாயகர் காலிபாப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி மற்றும் கத்தார் பிரதமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Articles

Latest Articles