ஏனைய மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் மலையக மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து கடந்த 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்கள் கடந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
தேயிலை ஏற்றுமதிமூலம் கடந்த வருடம் மாத்திரம் 1.5 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
200 வருடங்களாக இவ்வாறு அவர்கள் வருமானம் உழைத்துக்கொண்டுத்துள்ளனர் என ஊகித்து, கணக்கிட்டால் இதுவரைகாலமும் 300 பில்லியன் டொலர்கள்வரை இந்நாட்டுக்காக அவர்கள் உழைத்துக்கொடுத்துள்ளனர்.
மலையக மக்களுக்காக நாம் ஹட்டன் பிரகடனத்தை முன்வைத்தோம். எமது ஆட்சியின்கீழ் உரிமைகள் வழங்கப்படும் என உறுதியளித்தோம். அது நிச்சயம் நடக்கும்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு ஏனையமக்களைப்போலவே இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படும். காணி, வீட்டுரிமை கனவு நிறைவேற்றப்படும்.” – என்றார் அமைச்சர்.
அதேவேளை, இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் 116,275 லயன் அறைகள் உள்ளன எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










