உலகக் கிண்ண கால்பந்து 16 (Round of 16) சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை ‘அட்லஸ் லயன்ஸ்’ (The Atlas Lions) என அழைக்கப்படும் மொராக்கோ அணி பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்த மொராக்கோ, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்ப கட்டத்தில் கனடா அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
எனினும், போட்டியின் 50ஆவது நிமிடத்தில் மொராக்கோ தனது முதல் கோலை அடித்தது.
அஷ்ரப் ஹக்கிமி (Achraf Hakimi) வழங்கிய ‘ப்ரீ கிக்’ (Free kick) பந்தைப் பெற்ற ஔனாஹி, எதிரணி வீரர்களின் தடுப்புகளுக்கு மத்தியிலிருந்து பந்தை கம்பத்தின் கீழ் வலது மூலைக்குள் செலுத்தி கோல் அடித்தார்.
பின்னர் 82ஆவது நிமிடத்தில், பிராஹிம் டயஸ் (Brahim Díaz) வழங்கிய பந்தைக் கொண்டு ஔனாஹி மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் காயமடைந்த இஸ்மாயில் சைபாரிக்கு (Ismael Saibari) பதிலாக களம் புகுந்த சுஃபியான் ரஹிமி (Soufiane Rahimi), மேலதிக ஈடுசெய் நேரத்தின் இறுதி நிமிடத்தில் மொராக்கோவின் மூன்றாவது கோலை அடித்தார்.
இதன்படி, மொராக்கோ அணி வியாழக்கிழமை போஸ்டனில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், சனிக்கிழமை நடைபெறும் பராகுவே மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 1-0 என வெற்றி பெற்று, தனது வரலாற்றில் முதல்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தது.
எனினும், மொராக்கோவுடனான இந்தத் தோல்வியுடன் கனடாவின் உலகக் கிண்ணப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுவாக கால்பந்தாட்டத்தை விட ஐஸ் ஹாக்கி (Hockey) போட்டியில் அதிக ஆர்வம் காட்டும் கனடா தேசத்தை, இந்த உலகக் கிண்ணத் தொடரில் கனடா அணியின் ஆட்டம் வெகுவாகக் கவர்ந்திருந்தது.
