பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே, சீனா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றைச் சோதனை முறையில் ஏவியுள்ளது.
திங்கட்கிழமை மதியம், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து இலக்கற்ற போலி வெடிமுனையைக் (Dummy warhead) கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததாக சீனாவின் அரசு ஊடகமான ‘சின்ஹுவா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தங்களின் வருடாந்திர ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதி என்றும், இந்தச் சோதனையின் மூலம் சீனா எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இலக்கு வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிதூர ஏவுகணையை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சோதிக்கவிருப்பதாக, ஆஸ்திரேலிய நேரப்படி (AEST) மதியம் 12.30 மணியளவில் சீனா கான்பெராவுக்கு (Canberra) முன்கூட்டியே அறிவித்திருந்தது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் அவரது பிஜி நாட்டுப் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோர் பிஜியின் தலைநகரான ‘சுவா’வில் (Suva) வைத்து, புதிய ‘அமைதிப் பெருங்கடல்’ (Ocean of Peace) கூட்டணி மற்றும் ‘வுவாலே யூனியன்’ (Vuvale Union) ஆகிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே சீனாவின் இந்த அறிவிப்பு வெளியானது.
ஒரு நாட்டின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால் இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்துகொள்வது என்றும், பிராந்தியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசிப்பது என்றும் இரு நாடுகளும் வழங்கிய முக்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த ‘அமைதிப் பெருங்கடல்’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த ஏவுகணைச் சோதனை, ஆஸ்திரேலியா-பிஜி ஒப்பந்தத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டதாக எழும் யூகங்களை ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய தற்காலிகப் பிரதமருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் மறுத்துள்ளார். இருப்பினும், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சோதனையைச் செய்யப்போவதாக சீனா இன்று எங்களுக்குத் தெரிவித்தது. இது ஒரு அதிதூர ஏவுகணைச் சோதனையாகும். பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கும் எந்தவொரு நடவடிக்கை குறித்தும் நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் கூறுகையில், இந்த ஏவுகணைச் சோதனை பசிபிக் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக உள்ளது என்றும், இப்பகுதியில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
