யுரேனியம் ஏற்றுமதி: இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் கைச்சாத்து

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே யுரேனியம் ஏற்றுமதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது.

இரு நாடுகளும் அணுசக்தி ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்ட சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வியாழக்கிழமை மெல்போர்னில் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள உலகின் ஒன்பது நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், யுரேனியம் அமைதியற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளால் 2014ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் கீழ், முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே யுரேனியத்தை வாங்க மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக அல்பானீஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் தூய்மையான எரிசக்தியை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் முக்கியமானது என்று பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா உலகின் நான்காவது பெரிய யுரேனியம் உற்பத்தியாளராக உள்ளது. ஆஸ்திரேலிய கனிமவள கவுன்சிலின் (Minerals Council of Australia) படி, 2023-24 நிதியாண்டில் அந்நாடு $1.19 பில்லியன் மதிப்புள்ள யுரேனியத்தை ஏற்றுமதி செய்துள்ளது.

யுரேனியம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களின் (nuclear non-proliferation arrangements) கீழ் மட்டுமே  அரசு யுரேனியத்தை ஏற்றுமதி செய்கிறது.

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வரை ஆஸ்திரேலியாவில் இருப்பார்.

Related Articles

Latest Articles