ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏங்கல்ஸ் (Engels) விமானத் தளத்தில் இருந்த ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்றை உக்ரைன் அழித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்காக ரஷ்யாவினால் இந்த இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் எங்களை நியாயமான முறையிலும், முன்கூட்டியே திட்டமிட்டும் தற்காத்துக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இத்துடன், ரஷ்யாவின் எண்ணெய் தொழிற்துறைக்கு சொந்தமான கட்டமைப்புகள்) மீதும் உக்ரைனியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்தார்.
“எங்கள் நாட்டிற்கும் எங்கள் மக்களுக்கும் எதிராக ரஷ்யா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பிற்காக, அவர்கள் செலுத்தும் விலையை நாங்கள் அதிகரித்து வருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ‘ஸ்பைடர்ஸ் வெப்’ (Spider’s Web) தாக்குதலில், ரஷ்யாவின் பல Tu-95MS மற்றும் Tu-22M3 ரக குண்டுவீச்சு விமானங்கள் சேதமடைந்திருந்தன.
