நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாக்கலை அணைக்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் 117.5 மில்லிமீட்டர் மழையும், லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் காற்று மற்றும் மழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாமிமலை ஓயா, மாறே ஓயா, சியம்பலாகொட ஓயா மற்றும் காட்மோர் ஓயா ஆகிய சிற்றாறுகளிலும், காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி நீர்வீழ்ச்சி, மாறே நீர்வீழ்ச்சி, லக்ஷபான நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது,
ஆபத்தான சூழ்நிலை நிலவுவதால் நீர்வீழ்ச்சிப் பகுதிகளுக்குப் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமலசுரேந்திர அணையின் நீர்மட்டம் நிரம்பி மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மவுஸ்சாக்கலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்ஷபான, களுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. எந்த நேரத்திலும் இவற்றின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நுவரெலியா மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
