“நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி.” என அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
” கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பில் இங்கு பேச வேண்டியுள்ளது. 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஆடை பிரச்சினை முடிந்து விட்டது என ஆதம்பாவா எம்.பி.யும் சுகாதார அமைச்சருடன் பேசிய முஸ்லிம் எம்.பி.க்களும் கூறியிருந்தனர் .ஆனால் அந்தப் பிரச்சினை இன்றுவரை முடியவில்லை.
எனது இறுதி வார பாராளுமன்ற அமர்வில் எனது சகோதர இனத்துக்காக நான் கதைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
என்னுடைய இனத்திற்கு எந்தவொரு முஸ்லிம் நபராவது ஒருகாலத்தில் உதவி செய்திருந்தால் எனது பாராளுமன்ற கடைசி கிழமைகளில் செஞ்சோற்றுக் கடனை செய்துவிட்டுபோகவே இந்த சில நிமிடங்களை பயன்படுத்துகின்றேன்.
1995 இல் தமிழ் பெண்கள் பொட்டு வைத்துக்கொண்டு ரூபவாஹினியில் செய்திவாசிக்க முடியாது என சந்திரிகா அரசு சட்டம் கொண்டுவந்தது. அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் அதற்கு எதிராக போராடினார்.
என்னுடைய இனத்தில் இருந்து உங்களுடைய இனத்திற்கு கல்லெறியப்படுமாக இருந்தால் அந்தக்கற்களை எங்களுடைய இதயம் தாங்கிக்கொள்ளும். இதேநேரம் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத காலத்தில் உங்களுடைய இன அடிப்படைவாதிகள் யாராவது எங்களுடைய இனத்தை நோக்கி இனவாத கருத்துக்களை கூறினால் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைப்பர் என்று எதிர் பார்க்கின்றேன்.
வடக்கில் பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகள் தான் சுகாதாரத்தில் மிக மோசமாக சீரழிந்த நிலையில் இருக்கும் பகுதிகள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற இந்தப்பகுதிகளைத்தான் தெரிவு செய்தார்கள்.
நான் வடக்கு மாகாண சபையை என்று பொறுப்பேற்கின்றேனோ ஒரு தமிழனாக சொல்கின்றேன் முதல் முதலில் அபிவிருத்தி செய்வது பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகளைத்தான். “- என்றார்
