வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் இறுதி நிகழ்வான ‘ரந்தோலி மஹா பெரஹெரா’ இன்று இரவு வீதி உலா வரவுள்ளது.
இதன் மூலம் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற எசல பெரஹெரா விழா பிரம்மாண்டமாக நிறைவடைகின்றது.
இந்நீண்ட பாரம்பரியமிக்க ஊர்வலத்தைக் காண்பதற்காக ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பௌத்த பக்தர்களும் கண்டி நகருக்குத் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
இவ்வாறு வருகை தரும் மக்களுக்காகத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்செய்யப்பட்டுள்ளன.
இறுதி ரந்தோலி பெரஹெராவை முன்னிட்டு கண்டி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சிறப்புப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கூடுதலாக 250 காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த எசல பெரஹெரா நிகழ்வுகளுக்கு 6,200 காவல் துறை அதிகாரிகள், முப்படைகளைச் சேர்ந்த 1,200 வீரர்கள் மற்றும் 546 சிறப்பு அதிரடிப்படை (STF) வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
