……..

செம்மணியில் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட நாணயங்களைக் கொண்டு காலத்தைக் கணிக்க முடியாது!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட நாணயங்கள் உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்குரியவையாகவும் காணப்படுவதால், அவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான தடயவியல் அறிக்கையைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-
நாணயங்களின் நிலைமை
செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின் போது காலத்தை நிர்ணயிக்க உதவும் சான்றுப் பொருட்களாக நாணயங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், கிடைக்கப்பட்ட நாணயங்களில் பெரும்பாலானவை கடுமையாக அரிக்கப்பட்டிருந்தமையால், அவற்றின் மேற்பரப்பு அம்சங்களையோ அல்லது பொறிக்கப்பட்ட எழுத்துக்களையோ துல்லியமாக அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.
1870ஆம் ஆண்டுக்
குறிப்பும் கால நிர்ணயமும்
அகழ்வாராய்ச்சியின் போது 367ஆவதாக அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக் குற்றியில் 1870ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னரே இதனை அவதானிக்க முடிந்தது.
367ஆவது என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக் குற்றி ஒரு குறிப்பிட்ட காலக்குறிப்பைச் சுட்டிக்காட்டினாலும், அதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முழுப் புதைகுழியின் காலத்தையும் தீர்மானிக்க முடியாது.
எச்சரிக்கை அவசியம்
புதைகுழிகளின் ஒப்பீட்டுக் கால நிர்ணயத்தை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். எனவே, மீட்கப்பட்ட நாணயங்களின் காலத்தை மட்டுமே புதைகுழிக்கான உருவாக்கக் காலமாக எடுத்துக்கொள்வது அடிப்படையில் தவறாக அமையும் என்று அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
………..

கோதுமை மா விலை அதிகரிப்பு தோட்ட மக்கள்மீதான மரண அடி – சஜித்
” நாட்டு மக்களுக்கு நேற்று நள்ளிரவு வேளையில் நல்லதொரு செய்தியொன்றையும் கொண்டு வந்து, கோதுமை மாவின் விலையை 13 ரூபாவினால் அதிகரித்துள்ளீர்கள்.
இது கோதுமை மா சார்ந்த உற்பத்திகளான பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகள், தயாரிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை அதன் விலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும்.
விலை அதகரிப்பை மேற்கொண்டதை பார்க்கும் போது மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதை நினைத்துப் பார்க்க முடியாதிருக்கின்றன. இது தோட்ட பகுதி மக்கள் மீது அடித்த மரண அடியாகும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
……….

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை
நபரொருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகளான சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார மேடையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஷாந்த தொடங்கொட எனும் நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மற்றும் நிலாந்த ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2020 ஜூலை 31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2022 மார்ச் 31ஆம் திகதி பிரதிவாதிகள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பிற்கு எதிராக உயிரிழந்த ஷாந்த தொடங்கொடவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேன்முறையீட்டு மனு இன்று(21) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றம் விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய, முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளான நிலந்த ஜயசிங்க மற்றும் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
எனினும், மூன்றாம் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
……..

இலங்கையில் கடந்த ஆண்டு 455 காட்டு யானைகள் உயிரிழப்பு; யானைத் தாக்குதல்களில் 160 பேர் பலி
இலங்கையில் 2025ஆம் ஆண்டில் 455 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் 388 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம். அபேவிக்ரம எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி சமர்ப்பித்த ஆவணத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 2025ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் தாக்குதல்களால் 160 பேர் உயிரிழந்துள்ளதுடன், 221 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளின் மொத்த நீளம் 5,787.89 கிலோமீற்றர் எனவும், 2025ஆம் ஆண்டில் மின்சார வேலிகளை அமைப்பதற்காக 618.89 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
………..

அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை
அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை (22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எட்டு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய விஜேபுரம், பாலடிகுளம், நெலும்குளம், கவரேக்குளம், நச்சடுவ, ஹிடோகம, துருவில, நெல்லிகுளம், தலவ, சிராவஸ்திபுரம் மற்றும் டெக்கே கனுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாகத் தடைப்படும்.
அத்துடன், அனுராதபுரம் நகரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
…………

பிரசாரத்தை ஆரம்பிக்கிறது மொட்டுக் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ‘கமின் கமட்ட’ (கிராமம் கிராமமாக) மக்கள் சந்திப்புத் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (21) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய நாமல் ராஜபக்ச , அரசாங்கம் அடக்குமுறைகள் மூலம் ஆட்சியை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பணவீக்கம் 8 சதவீதத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் தேர்தல் தொகுதி மட்டத்திலான மக்கள் சந்திப்புகளை நடத்தி, கிராம மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதே இப்பிரசாரத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
…………
யமனுக்கே அஞ்சாதநாம் என்பிபி அரசுக்கு அஞ்சோம்: பூஜை வேலை
செய்ய ஆரம்பித்துவிட்டது!
“யமனையே தோற்கடித்த புத்த பெருமானின் வழியில் பயணிப்பவர்கள் நாங்கள். எனவே, யமனுக்கே அஞ்சாத நாங்கள் , பெலவத்த ஆட்சியாளர்களுக்கு அஞ்சப்போவதில்லை.” என்று உலப்பனே சுமங்கல தேரர் சூளுரைத்துள்ளார்.
“ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரியும், புத்த சாசனத்தை பாதுபாப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 6 ஆவது நாளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறிப்பாக எம்மால் நேற்று நடத்தப்பட்ட பூஜை வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் சந்தி சந்தியாக நடத்த ஆரம்பித்துள்ளனர்.
தீர்வு கிடைக்கும்வரை நாமும் எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.” எனவும் உலப்பேனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
