கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. ஆவணங்கள் கையளிப்பு

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவரும் மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு மற்றும் நீதி வழங்கப்படாமை தொடர்பில் கனேடிய அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ். வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 117 ஏக்கர் காணிகளையும் உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி. கோரினார்.
தையிட்டி காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமை தொடர்பிலும் , கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சிறீதரன் எம்.பி. கொண்டு வந்தார்.
போர் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்தும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத சூழல் தொடர்வதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி. தலைமையிலான குழுவினர், சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின் போது செம்மணி மனிதப் புதைகுழி, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான விரிவான ஆவணங்கள் சிறீதரன் எம்.பியால் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
………
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ள போதிலும், நீண்டகால ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டு வரப்படுகின்ற இந்தச் சட்டமூலத்திலும் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு மிகப் பரந்துபட்டதும், தெளிவற்றதுமான வரைவிலக்கணமே வழங்கப்பட்டுள்ளது.
இது தன்னிச்சையான விளக்கங்களுக்கும், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள், போராட்டங்கள் மற்றும் சிவில் செயற்பாடுகளைக் குற்றமாக்குவதற்கும் வழிகோலும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், எதிர்பார்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஆழமான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அந்தச் சட்டத்துக்கான பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம், கடந்தகால துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமேயன்றி, அதிகாரிகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக அமையக் கூடாது.
இலங்கை இவ்வாறான சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கருத்திற் கொண்டு நோக்குகையில், இந்தச் சட்டத்தில் வலுவானதும் யதார்த்தபூர்வமானதுமான பாதுகாப்பு நடைமுறைகள் உள்வாங்கப்படுவது இன்றியமையாததாகும்.
இருப்பினும் இந்தச் சட்டமூலத்தில் அவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் போதியளவு அவதானம் செலுத்தப்படாமை கரிசனைக்குரிய விடயமாகும்.
அதேவேளை, இந்தச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பரந்துபட்ட வரைவிலக்கணத்துக்கு மேலதிகமாக, நபரொருவரை குற்றச்சாட்டுக்களின்றி ஓராண்டு வரையிலும், அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு முன்னர் ஒரு வருடம் வரையிலும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இந்தச்சட்டமூலம் இடமளிக்கிறது.
இது பலவந்தமான தடுப்புக்காவலில் இருந்து விடுபடுவதற்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கருதப்பட வேண்டும் என்ற நியதி மற்றும் நியாயமான காலத்துக்குள் வழக்கு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கான உரிமை என்பவற்றை மீறுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தச் சட்டமூலத்தை விலக்கிக் கொள்ளுமாறும், அதனை அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப திருத்தியமைக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
அதுவரை பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையில் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
……………
‘பெரும் மனிதப் புதைகுழி’ என்பதை திட்டமிட்டு நீக்கியுள்ள ராஜ் சோமதேவ

செம்மணிப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில் ‘பெரும் மனிதப் புதைகுழி’ என்ற சொற்றொடரை பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரத்தில் பல முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்தச் சொற்றொடர் உள்ளடங்கியிருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் அந்தச் சொல் விடுபட்டுள்ளமையானது தீவிரமான சந்தேகங்களை எழுப்புவதுடன், இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருத வேண்டியுள்ளது.
குறித்த அகழ்வுப் பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்கான அடிப்படை ஏதேனும் இருந்தால், அது தொடர்பான மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் நம்பகமான சான்றுகள் மூலம் அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
எச்சங்களின் ஆழம், பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் அவற்றின் நிலை ஆகியவை தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமான அம்சங்கள் என்பதால், இந்த அம்சங்கள் வழக்கமான அடக்கம் என்ற முன்வைக்கப்பட்ட விளக்கத்துடன் பொருந்துகின்றனவா என்பதை அறிக்கை விளக்க வேண்டும்.
அத்துடன், குறித்த முடிவுகளுக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் அவதானிப்புகளையும் ஒப்பீட்டுச் சான்றுகளையும் அறிக்கையில் முறையாக அடையாளப்படுத்த வேண்டும்.
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.
அடையாளம் காணக்கூடியதும் சரிபார்க்கக் கூடியதுமான அறிவியல் சான்றுகள் ஆதரிக்காத வரை இத்தகைய கருதுகோளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்ட உண்மைநிலை மற்றும் அறிவியல் அடிப்படைகளைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெளிவுபடுத்த வேண்டும்.
போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் செம்மணிப் புதைகுழிக்கான காரணமாகத் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைக் கருத முடியாது எனவும் சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
…………
9 ஆவது நாளாக தொடரும் பிக்குகளின் போராட்டம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் தலைமையிலான குழுவினர் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுத்துவரும் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் இன்றுடன் 9 ஆவது நாளை எட்டியுள்ளது.
கடந்த 16 ஆம் திகதியன்று விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்களால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து குறித்த பூங்கா வளாகத்திலேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பையும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
…………
குவைத்தில் இரு இலங்கைப் பெண்களின் மரணங்கள் குறித்து விசாரணை

குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில், சந்தேக மரணங்கள் என்ற அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாவது சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள பொருட்கள் சேமிப்பு அறையில், 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, அஹ்மதி பொது வழக்குத் தொடுநர் திணைக்களம் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யவும், சடலத்தை தடயவியல் திணைக்களத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், அல்-நஹ்தா பகுதியில் 1999ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பவத்தின் பின்னணியை ஆராயவும் ஜஹ்ரா பொது வழக்குத் தொடுநர் திணைக்களத்தின் உத்தரவின்பேரில் சடலம் தடயவியல் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் தொடர்பில் குவைத் பிரஜை ஒருவர் அவசர நடவடிக்கைப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள், மருத்துவப் பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
……..
வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி: தாய்லாந்து பெண்கள் கைது

வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கியதாகக் கூறப்படும் விபசார விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, தாய்லாந்து பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரைன் டிரைவ் பகுதியில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த நிலையத்தை நிர்வகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும், 35 முதல் 43 வயதுக்குட்பட்ட தாய்லாந்துப் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
……………
மாத்தறை கடற்கரையில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்பு

மாத்தறை, தலல்லை நவதுன்ன கடற்கரையில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 மூட்டைகளும் 11 பயணப் பைகளும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையும் கரையோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது இவை கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் வகை, அளவு உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
குறித்த பொதிகளில் போதைப்பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
……………
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட
இருவர் பரிதாப மரணம்

காட்டு யானைகளிடம் இருந்து விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சோகச் சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில – எல்லேவெவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 5 வயது சிறுவனுமே மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் காப்பாற்ற முயன்ற மேலும் இருவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகிப் காயமடைந்துள்ளமையுடன், அவர்கள் தற்போது தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










