அமெரிக்க தேர்தல் முடிவு சிறந்த பாடம்: என்பிபி அரசுக்கு சஜித் எச்சரிக்கை
“தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களே, அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் முடிவுகளைப் பாருங்கள், மக்;கள் நலன்புரி திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும், விலைவாசி உயர்வாலும் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இங்கும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு சவால் விடுக்கின்றோம். அப்போது நாட்டு மக்களின் நிலைப்பாடு தெரியவரும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
………………………
இலங்கையில் கொத்தணிக் குண்டுகளுக்குத் தடை

இலங்கையில் கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.
ஒஸ்லோ உடன்படிக்கை என அழைக்கப்படும் கொத்தணிக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி கையொப்பமிட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழான இலங்கையின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவது தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூல வரைவு, பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக அடையாளம் காணப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி, திருத்தப்பட்ட சட்டமூல வரைவைத் தயாரிப்பதற்கான கொள்கை ரீதியான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
……………..
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஆபத்தானதா?

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்று பாரதூரமானதல்ல. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அது எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகக்கூடும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பல வருடங்களாகவே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, அரசைப் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டம் அவசியமாகும்.
கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளன. இது நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டமூலமாகும். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்று இது பாரதூரமானதல்ல.
மறுபுறத்தில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டுக்கு எந்தவொரு சட்டமும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது ஏற்புடையதல்ல” என்றார் அமைச்சர்.
……………
கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழுவை நியமிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

1983 கறுப்பு ஜூலை சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கக் கோரும் பிரேரணை, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த பிரேரணை, நேற்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய சிறி ஹேரத் அந்தப் பிரேரணையை ஆதரித்தார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே இந்த சிறப்புத் தெரிவுக் குழுவின் நோக்கமாகும்.
……………..
தேசிய தீபாவளி விழா மாத்தளையில்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் மாத்தளை மாவட்டச் செயலகம், மற்றும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் தேசிய தீபாவளி விழா – 2026, இம்மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

………………….
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நிதிசார் அறிவூட்டல் கண்காட்சி நாளை
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், ‘FinLit EXPO 2026’ எனும் நிதிசார் அறிவூட்டல் கண்காட்சி நாளை (05) வியாழக்கிழமை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகப் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சியில்
நிதி முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், முதலீட்டு வாய்ப்புகள், ஓய்வூதியத் திட்டங்கள், காப்புறுதி மற்றும் நிதிப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறவுள்ளன.
அத்துடன், பங்குச் சந்தை முதலீடுகள், மோசடிகளைத் தவிர்த்தல், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் மத்திய வங்கியின் பணிகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்கண்காட்சி இலங்கை மத்திய வங்கியின் நுவரெலியா பிராந்திய அலுவலகத்தினால், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
……………….
மீன் ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க திட்டம்

இலங்கையின் ஏற்றுமதித் துறையை மேலும் வலுப்படுத்தி, குறிப்பாக மீன்பிடித் துறையின் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் ஏற்றுமதித் துறையின் முன்னேற்றங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், ஏற்றுமதித் துறையை முன்னேற்றுவதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதித் துறை என்பது நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையும், 2 கோடியே 20 இலட்சம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான துறையாகும்.
அந்த வகையில், மீன்பிடித் துறையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன் பிரதிபலனாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியின் ஊடாக நாட்டிற்கு 6,888.9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 285 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட மீன் ஏற்றுமதி வருமானம் தற்போது 315 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
மீன்பிடித் துறையில் காணப்படும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கடற்றொழிலாளர் குடும்பங்களின் வருமான உயர்வுக்கும் பங்களிப்பு வழங்க முடியும்.
மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், கடந்த காலங்களில் நிலவிய ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களினால் நாடு எதிர்கொண்ட பாதிப்புகளையும் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் சாதகமான பாதையில் கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு பிரச்சினை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களான மகாவலி அதிகாரசபை, காணி மற்றும் வனத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, அமைச்சர் லால் காந்த தலைமையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, சில அரசியல் தரப்பினர் இவ்வாறான பிரச்சினைகளைப் பயன்படுத்தி இனவாத மற்றும் மதவாத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், சிறிய பிரச்சினைகளைக்கூட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணை இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரானதாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் சம உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும்.
எனவே, எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் இனவாத அரசியல் பிரசாரங்களுக்கும், மதவாதத்தைத் தூண்டும் முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஏமாறாமல், நாட்டின் ஒற்றுமையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் பாதுகாப்பதில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.










