2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 13,000 மில்லியன் ரூபாவை மலையக மக்களுக்கான நிதி ஒதுக்கீடாகக் கூறி பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறு பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தால் தலையில் இடிதான் விழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட போதிலும், மறுபுறத்தில் அவர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒரு ஏமாற்று நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடம் அறிவிக்கப்பட்டுள்ள 200 ரூபா கொடுப்பனவை சம்பள நிர்ணய சபையின் ஊடாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தமது கூட்டணி ஆதரிக்கும் எனக் கருத வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழில்துறையைப் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், குத்தகை ஒப்பந்தங்களுக்கு எதிரானவர்கள் தாம் அல்லர் என்றும், எனினும் மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
