ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு, ஊவா மாகாண சபையிலிருந்து பறிபோனதானது ஜீரணிக்க முடியாததொன்றாகும். இத் தமிழ்க் கல்வி அமைச்சு நீக்கப்பட்டமை, ஊவா மாகாண தமிழ் மக்களுக்கும், தமிழ் கல்விச் சமூகத்திற்கும் பெரும் பாதிப்பேயாகுமென்று, இ.தொ.கா. உதவிச் செயலாளரும், முன்னால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன் தெரிவித்தார்.
முன்னால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சென்னன் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில், ‘அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாகவே, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளில் தமிழ்க்கல்வி அமைச்சுக்கள் கொண்டுவரப்பட்டன. இவ் அமைச்சுக்களினால் தமிழ்க்கல்விச் சமூகத்தினர் பெரும் பயன்களைப் பெற்று வந்திருப்பது, யாவரும் அறிந்ததேயாகும்.
ஏற்கனவே பொதுவான அமைச்சொன்றின் கீழேயே, தமிழ்க்கல்வி விடயங்களும் உள்ளடங்கப்பட்டிருந்தன. அக்காலப்பகுதியில் தமிழ்க்கல்வித்துறைக்கு பல்வேறு வகையில் புறக்கனிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய காரணங்களினாலேயே, தமிழ்க்கல்விக்கென தனியானதோர் அமைச்சு இருக்க வேண்டுமென்ற பலத்த கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன.
இதையடுத்தே, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தமிழ்க்கல்விக்கென ஒருங்கிணைந்த அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ் அமைச்சுக்கள் ஊடாகவே, இரு மாகாணங்களில் தமிழ்க் கல்வித்துறையின் அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் எம்மவர்களே நன்மையடைந்து வந்தனர்.
ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சை இல்லாமல் செய்ய வேண்டுமென்று மாற்று சமூகத் தலைமைகள், பலவகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, கங்கனம் கட்டிச் செயற்பட்டு வந்தனர். ஆனால், அச் செயற்பாடுகள் அனைத்தையும், அக்காலப்பகுதியில் தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமான் முறியடித்து, தமிழ்க்கல்வி அமைச்சை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்தார்.
ஆனால், தற்போது, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில், 02-04-2021 முதல், ஊவா மாகாணத்தில் தமிழ்க்கல்வி அமைச்சை, விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் இல்லாமல் செய்துவிட்டார். இச் செயற்பாடானது மாகாண தமிழ் மக்களுக்கும், கல்விசார் சமூகத்தினருக்கும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தப் போகின்றது.
இவ் விசேட வர்த்தமானி அறிவிப்பிற்கு முன், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் எமது சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்க்கல்வி சார் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ் வகையில் எந்தவொரு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்க்கல்வி அமைச்சை நீக்கியதானது, தமிழ் மக்களின் மனதினை புண்படுத்திய செயலாகும்.
ஆளுனர் மேற்கொண்டுள்ள இம் முடிவு மீள்பரிசீலனை செய்யப்படல் வேண்டும். தமிழ்க்கல்வி அமைச்சு நீக்கியமை குறித்த விசேட வர்த்தமானியை மீளப்பெற்றுக் கொள்ளல் வேண்டும். தவறின், இச் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெறவே செய்யும்.
ஊவா ஆளுனரும் சிறுபான்மை சமூகத்தவராக இருக்கும் நிலையில், தமிழ்க்கல்வி அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, அத் தமிழ்க்கல்வி அமைச்சை மீண்டும் ஊவா மாகாணத்தில் ஏற்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










