காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – முனைத்தீவு கிராமத்துக்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த காட்டு யானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரைத் தாக்கியதில் அவர் சாவடைந்தார்.

முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய காளிக்குட்டி சங்கரப்பிள்ளை என்பரே உயிரிழந்தார்.

இதன்போது காட்டு யானை வீட்டின் பகுதிகளையும் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது.

இந்தக் காட்டு யானையின் அச்சுறுத்தல் காரணமாக அதிகாலை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

போரதீவுப்பற்றுப் பகுதியின் காட்டுப் பகுதியை அண்டிய பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த யானைகள், இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள்ளும் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன என்று மக்கள் கவலை வெளியிட்டனர்.

Related Articles

Latest Articles