என்பிபி ஆளும் மெதகம பிரதேச சபையின் பட்ஜட் தோற்கடிப்பு!

பல்கலை. விரிவுரையாளர்கள் நாளை போராட்டம்

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளைக் முன்வைத்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை (30) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் என FUTA பொதுச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை, தற்போது பணியாற்றும் விரிவுரையாளர்கள் மீது சுமத்தப்படும் அதிகப்படியான பணிச்சுமை, போதிய வளங்களின்மை மற்றும் போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பணிப்புறக்கணிப்புடன் இணைந்து நாளைய தினம் எதிர்ப்பு ஊர்வலமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

………….

என்பிபி ஆளும் மெதகம பிரதேச சபையின் பட்ஜட் தோற்கடிப்பு

 

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள மெதகம பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது.

பிரதேச சபையின் தவிசாளர் அஜித் பிரியந்த ரத்நாயக்க தலைமையில் இன்று காலை நடைபெற்ற சபை அமர்வில், அவர் வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சபையில் சமர்ப்பித்து விவாதத்துக்கு எடுத்துக்கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு–செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக எட்டு உறுப்பினர்களும் எதிராக ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி , சர்வஜன பலய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ), பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் ஒன்பது உறுப்பினர்களும் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனால், மெதகம பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

…………..

களனி ஆற்றில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஜப்பான் உதவி

களனி ஆற்றுப் பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக இலங்கைக்கு சுமார் 456 கோடி ரூபாய் (2.179 பில்லியன் ஜப்பானிய யென்) நிதியுதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

இதற்கான பரிமாற்றக் குறிப்புகள் மற்றும் நிதியுதவி ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (28) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டாவும் பரிமாற்றக் குறிப்புகளில் கைச்சாத்திட்டனர்.

அதனைத் தொடர்ந்து, நிதியுதவி ஒப்பந்தத்தில் அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதம பிரதிநிதி ஷிகியோ ஹொன்சுவும் கைச்சாத்திட்டனர்.

ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், JICA ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

வத்தளை மற்றும் பேலியகொடை பகுதிகளை உள்ளடக்கிய முதுன் எல உப வடிநிலப் பகுதியில், கனமழை மற்றும் களனி ஆற்றின் நீர்மட்ட உயர்வு காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் கீழ், நொடிக்கு 15 கனமீற்றர் நீரை வெளியேற்றும் திறன் கொண்ட புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்படவுள்ளது. அத்துடன், நீர்மட்டத்தைக் கண்காணித்து நீரேற்று நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நவீன SCADA தொழில்நுட்பக் கட்டமைப்பும் நிறுவப்படவுள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டம் உயரும்போது மழைநீரை விரைவாக வெளியேற்றுவதன் மூலம் வெள்ள அபாயத்தைக் குறைத்து, அப்பகுதிகளின் வடிகால் வசதிகளையும் வெள்ள முகாமைத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் குடியிருப்புப் பகுதிகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகளை வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதுடன், நகர்ப்புற வாழ்வாதாரங்களையும் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதுகாக்க உதவும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வர்த்தகம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக விளங்கும் பேலியகொடைப் பகுதியின் அபிவிருத்திக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதுடன், கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தின் வெள்ள முகாமைத்துவத்தையும் மேம்படுத்த இத்திட்டம் பங்களிக்கும்.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அனர்த்த இடர் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இந்த நிதியுதவி அமைவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

………………..

உச்சம் தொட்ட மிகளாய் விலை

இந்தியாவிலிருந்து உலர்ந்த மிளகாய் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு கிலோகிராம் உலர்ந்த மிளகாய் அதிகபட்சமாக 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் இறக்குமதி செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கொள்கலன்களில் உள்ள உலர்ந்த மிளகாய் சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவுப் பரிசோதகர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த மிளகாய் தொகுதிகள், உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் உள்ளூர் சந்தைக்கு விடுவிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த நிலைமையைத் தொடர்ந்து இலங்கைக்கான உலர்ந்த மிளகாய் ஏற்றுமதியை இந்திய வர்த்தக சங்கங்கள் இடைநிறுத்தியுள்ளன. இதுவும் உள்ளூர் சந்தையில் மிளகாயின் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக விநாயகசுந்தரம் தெரிவித்தார்.

மேலும், நிலவும் எல் நினோ காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

…………….

தேயிலை உற்பத்தியைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

 

நாட்டின் வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெருக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கும் தேயிலை உற்பதியைப் பாதுகாப்பதற்கும், தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் கமநல மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அல்லது வர்த்தக ரீதியாகப் பதிவு செய்யப்பட்டவைகளே நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்கப் பேணப்படும் தேயிலை நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திகளுக்காக மாத்திரம் இந்தக் காப்பீடு வழங்கப்படவுள்ளது.

வெள்ளம், வறட்சி மற்றும் மண்சரிவு போன்ற மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தவிர்க்க முடியாத நோய்கள், கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்காகவும் இந்தத் திட்டத்தின் கீழ் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடி நாற்று மேடைகளுக்காக ஒரு செடிக்கு வருடாந்தக் காப்பீட்டுத் தொகை 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தேயிலைச் செடியை நட்டு, கொழுந்து பறிக்க ஆரம்பிக்கும் வரை அதிகூடிய நான்கு வருட காலப்பகுதிக்கு, ஒரு ஏக்கருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியுமான வசதி இதன் விசேட அம்சமாகும்.

தேயிலைச் செடி நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கான வருடாந்தக் காப்பீட்டுத் தவணைக் கட்டணம், காப்பீட்டுத் தொகையில் 6 சதவீதமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைக் கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது 1918 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடி நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கான வருடாந்தக் காப்பீட்டுத் தவணைக் கட்டணம், காப்பீட்டுத் தொகையில் 6 சதவீதமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைக் கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது 1918 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

…………….

அடக்குமுறைச் சட்டங்களால் GSP+ இழக்க நேரிடலாம் – சஜித்

WEB – 1

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று (29) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை மறுசீரமைத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, அவற்றில் எதனையும் முறையாக நிறைவேற்றவில்லை எனக் கூறினார்.

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வறுமை ஒழிப்பு மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசாங்கம், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் சட்டமூலம் மூலம் மக்களின் சிவில், மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குறித்த சட்டமூலத்தின் மூலம் பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் செல்வதுடன், இது ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்புக்கான சட்டங்கள் அவசியமானவை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவை சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை நியமங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், முன்மொழியப்படும் சட்டங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரித்தார்.

மேலும், இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக இலங்கைக்கு கிடைக்கும் GSP+ வரிச் சலுகை பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணை அரசாங்கத்தையும் கட்சி அலுவலகத்தையும் பலப்படுத்துவதற்காக அல்ல; மக்களின் உரிமைகள், இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும், மக்களின் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

……………

சொகுசுப் பேருந்தை வழிமறித்து தாக்குதல்: அறுவர் கைது

களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் சொகுசுப் பேருந்தொன்றை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வாதுவை மற்றும் மொரொந்துடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைக் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

………….

விஜயதாச ராஜபக்சவின் மகனுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்னெடுத்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை வழங்குவதற்காக, ஒக்டோபர் 28ஆம் திகதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவலையில் அமைந்துள்ள ரகித ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்றுள்ளது.

எனினும், அதிகாரிகள் சென்றபோது அவர் வீட்டில் இருக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த அறிவித்தலை வழங்குவதற்காக அதிகாரிகள் மீண்டும் அவரது இல்லத்துக்குச் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

……………..

 

 

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles