பொது கூட்டு எதிரணி தலைவர்கள் இன்று காலை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை (Andrew Patrick) சந்தித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கூட்டு எதிரணி முக்கியஸ்தரும், முன்னாள் நீதி அமைச்சருமான சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை, கலந்தாலோசனை மற்றும் முக்கிய தரப்பினருக்கான மரியாதை ஆகியவை இல்லை என்று தெரிவித்தார்.
குறிப்பாக மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த போதிலும், அதற்கு எந்தப் பதிலும் அல்லது ஒப்புதல் அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முன்மொழிவுகள் குறித்து நீதியமைச்சருக்கே தெரியாமல் இருந்ததாக குற்றஞ்சாட்டிய பீரிஸ், இது முற்றிலும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்ட செயல்முறை என விவரித்தார்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, அமைச்சரவை தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதியைச் சந்திக்க அழைக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனை அவர் கண் துடைப்பு நடவடிக்கை என விமர்சித்தார்.
இந்த அரசியலமைப்பு திருத்தம் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளுக்குத் தீர்வு காணாது என்றும் அவர் எச்சரித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மொத்த வழக்குகளில் சுமார் 1 சதவீதம் மட்டுமே என்பதால், இந்த மாற்றம் வழக்குத் தாமதத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏனைய தொழில்துறை குழுக்களிடமிருந்தும் இதேபோன்ற கோரிக்கைகளை உருவாக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். செவிலியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசியலமைப்பின் 12ஆம் உறுப்புரையின் கீழ் இதேபோன்ற சலுகைகளை கோரக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிறைச்சாலைகளில் இடம்பெறும் மரணங்கள், அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் கல்வித்துறையின் சவால்கள் போன்ற அவசரமான தேசிய பிரச்சினைகள் இருக்கும்போது, அரசாங்கம் நீதிபதிகளின் பதவிக்காலம் மீது கவனம் செலுத்துவதாக அவர் விமர்சித்தார்.
“இதுதானா நாட்டின் முன்னுரிமை?” என்று கேள்வி எழுப்பிய பீரிஸ், மக்களால் நீண்டகாலமாக எல்லையற்ற மரியாதையுடன் பார்க்கப்பட்டு வந்த நீதித்துறை தற்போது பலவீனப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும் என்றும் பீரிஸ் உறுதிப்படுத்தினார். இந்தத் திருத்தம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு தீர்வு காணத் தவறுவதுடன், ஜனநாயக ஆட்சிமுறையை பலவீனப்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக அவர் வாதிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் புதிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உபதிஸ்ஸ குமாரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.










