Home Blog Page 19

எங்களுக்கு சேறு பூசுவதைவிடுத்து சவால்களை எதிர்கொள்ளுங்கள்: நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. குற்றம் சாட்டினார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைகே கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எண்ணெய் பெறுவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றிய அரசு, தற்போது அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி அதன் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது. அதேபோல், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொலிஸார் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அச்சுறுத்தி, பழைய பொய்களை உண்மை என நிரூபிக்க அரசு முயற்சிக்கின்றது. பொலிஸ்மா அதிபர் நாட்டுக்காகச் செயலாற்ற வேண்டுமே தவிர, ஒரு அரசியல் கட்சியின் தேவைக்காக அல்ல. அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றின் முழுமையான பயனைப் பெற அரசு தவறிவிட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச்சலுகைகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ராஜபக்சக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என அரசு திட்டமிட்டுப் பொய் கூறுகின்றது. இவ்வாறான பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, அரசு தனது கையாலாகத்தனத்தை மறைக்க எம் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு, நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.” – என்றார்.

எதிரிகளின் கப்பல்களை தவிர மற்ற அனைத்தும் ஹார்முஸ் வழியாக செல்லலாம்! ஈரான்

ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது.

எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார்.

முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்.

அதற்கு உடனடியாக ஈரானும் கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஐ.நா..வின் சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரான் பிரதிநிதி அலி மூசாவி, “ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், எங்களுடனான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஹார்முஸ் நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லலாம்.

வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாலுமிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. அமைப்புடன் ஒத்துழைக்க ஈரான் தயாராக உள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களே காரணம். ராஜதந்திரம் ஈரானின் முன்னுரிமையாக உள்ளது. இருப்பினும், ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையும் அதைவிட முக்கியமானவை” என்று மூசாவி கூறினார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் மூடியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு ஹார்முஸ் வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட சென்றடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் ஈரான் கூறியது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒரு கடற்படைக் கூட்டணியை உருவாக்க ட்ரம்ப் முயன்று வருகிறார். ஆனால், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பவில்லை என பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் தெரிவித்துவிட்டன. இதனால் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்குத் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மாகாண சபைத் தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நான் விரும்புகின்றேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஆட்சியமைக்க முடியும் என்ற பலமான நம்பிக்கை எமக்கு உள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.

தற்போதைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி., நாட்டை ஒரு கட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் காணப்படுகின்றது. நாம் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கின்ற போதிலும், ஒரு கட்சி ஆட்சியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் ஜே.வி.பி. பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியானது, பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையிழப்பைப் பிரதிபலிக்கின்றது. இருப்பினும், வடக்கு – கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும்.” – என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ எரிபொருள் மற்றும் மின்சாரத்தை நாம் அனைவரும் சிக்கனமாக – பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

நாட்டில் QR நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறையினரிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்சாரம் மற்றும் எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தால் தாங்கக்கூடிய அளவை தாங்கிக்கொண்டே எரிபொருள் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையின்போது கறுப்பு சந்தையும் தோற்றம்பெறும். அவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

QR முறைமையை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான எரிபொருளை எவராவது முறைகேடாக சேமிக்க முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் தென்பகுதியில் பலத்த சேதம்: 88 பேர் காயம்!

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தென் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்ததால், ஆரத் Arad நகரை ஏவுகணைத் தாக்கியுள்ளது.

இதில் சுமார் 88 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள டிமோனா Dimona நகரிலும் மேற்படி தாக்குதலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை, ஈரானில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா வியூகம்?

ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக புதிதாக 3 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இந்த போர் இன்று 23 ஆவது நாளாக நீடிக்கின்றது. ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்களைஅமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தரைமட்டமாக்கி உள்ளன.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் நடான்ஸ் நகரில் உள்ள அணு சக்தி தளத்தின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் அணு சக்தி தளம் கடுமையாக சேதமடைந்தது. அங்கு அணு கதிர் வீச்சு ஏற்படவில்லை என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஈரான் கடற்கரையில் இருந்து 26 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது.

ஈரான் முழுவதும் இருந்து குழாய்கள் மூலம் இந்த தீவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் 90% கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி வாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவை கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கெனவே 16 போர்க்கப்பல்கள் முகாமிட்டு உள்ள நிலையில் யுஎஸ்எஸ் ட்ரிபொலி, யுஎஸ்எஸ் சான் டியாகோ, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் ஆகிய 3 அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கு விரைந்துள்ளன.

இவற்றில் தலா 2,200 வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் உள்ள வீரர்கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்தவர்கள்.

 

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றறொன்றின் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 443 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 398 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 60 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

 

675-ற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் இன்னும் உதவியற்ற நிலையில் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் அத்தகைய நடவடிக்கைகளின் மிகவும் மந்தக் கதியில நடைபெறுவதாக, பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடித் தலையீட்டின் கீழ் இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கை கோருகிறது.

‘டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு’ என்ற தலைப்பில், மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் இடும் செயற்பாடு, 2026 மார்ச் 19 அன்று, கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் எந்தவொரு நிரந்தரத் தீர்வுமின்றி பாடசாலைகள், தற்காலிக முகாம்கள், கூடாரங்கள் மற்றும் பழைய பாழடைந்த தோட்டக் கட்டிடங்களில் இன்னும் வசித்து வருவதாகவும், பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், அந்த வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பற்றவை என அவர்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கான காணிகள் விடுவிப்பது குறித்து இன்னும் தெளிவில்லாத தன்மை காணப்படுவதாகவும், அரசாங்கம் அறிவித்த நிவாரணங்களைப் பெறுவதில் காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பொறுப்பு நிறுவனங்களுக்கா அல்லது அரசாங்கத்திற்கா எனும் இழுபறி இன்னும் நீடிப்பதாகவும், அரசாங்கத்தின் கொள்கைத் தெளிவின்மையும், மந்த கதியிலான செயல்பாடுகளுமே இதற்குப் பிரதான காரணங்கள் எனவும் அறிக்கையில் வலியுத்தப்பட்டுள்ளது.

டித்வா பேரனர்த்தம் மலையகத் தமிழ் சமூகம் மீது ஏற்படுத்திய பாரிய தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு துயருறும் பின்னணியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு 15 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

1.பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு முழுமையாகச் சேதமடைந்த மற்றும் மீள்குடியேற்ற வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் வரையும், தேவைப்படின் காணிக்கு மேலதிகமாக 50 இலட்சம் ரூபாய் வரையும் வழங்கப்பட வேண்டும்.

2.நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமாக எவ்வித பாரபட்சமுமின்றி தகைமையுள்ள மலையக மக்களுக்கும் வீடு மற்றும் ஏனைய பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். தோட்டத்தில் வேலை செய்பவர்கள்,வேலை செய்யாதபவர்கள் என்ற பாகுபாடு அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டுமானத்தில் காட்ட கூடாது.

3.மலையக மக்களுக்கு இந்நாட்டின் நிலத்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் தோட்டப் பகுதிகளில் காணி உறுதியுடன் கூடிய தனி வீடுகள் வழங்கப்படல் வேண்டும். தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் திட்டங்கள் வேண்டாம்.

4.இந்திய வீடமைப்புத் திட்டத்தை டித்வா பேரனர்த்த நிவாரணத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அது தனித்திட்டமாகத் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

5.டித்வா வீடமைப்புத் திட்டங்கள் முறையான வீதிகள், முகவரி, மின்சாரம், குடிநீர், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் கொண்ட கிராமங்களாக மலையக குடியேற்றங்கள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். “தோட்ட முறைமை ஒழிந்து புதிய கிராமங்களாக நிலைமாற்றம் பெற வழிவகுக்க வேண்டும்.

6.காணி உரிமை வழங்கவும், புதிய கிராமங்களை உருவாக்கவும் பெருந்தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தங்கள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

7.தற்காலிக முகாம்களில், கூடாரங்களில் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களை அலைக்கழிக்காமல் கண்ணியத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தி, அவர்களுக்கு வீடுகளுக்கான காணி தெரிவு செய்யும் போது குடும்பங்களுடன் கலந்தாலோசித்துத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

8.காணிக்கான உரிமை பெண்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும்.

9.காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேசத்தர நியமங்களுக்கு அமைவாக (SPHERE Standards) இடைக்கால (Transitional shelter) வீடுகள் அடிப்படை வசதிகளுடன் உசிதமான இடங்களில் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

10.பாதிக்கப்பட்டமலையகத் தமிழ் குடும்பங்களுக்கான அரச நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை (விவசாயம், கால்நடை, தொழில், வாழ்வாதாரம் என்பன) வழங்கும் போது வெறும் சமத்துவத்திற்கு அப்பால் நீதியான (Equitable) அணுகுமுறையை அரசு கடைபிடிக்க வேண்டும்.

11.இலங்கையின் ஏனைய குடிமக்கள் போலவே பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் சேவைகள் என்பன பிரதேச செயலகம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்பட வேண்டும். கம்பனி மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அல்ல.

12.மலையகத் தமிழரின் மொழி உரிமை மதிக்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பப் படிவங்கள், அறிவித்தல்கள் மற்றும் தொடர்பாடல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அரச அலுவலகங்கள் இக்குடும்பங்களுடன் தமிழில் தொடர்புகொள்வதை உறுதி செய்தல் வேண்டும்.

13. நிவாரணம், நட்டாடு பெற்றுக்கொள்வதில் சிரமம், குறைகள் இருப்பின் அவற்றை முறைபாடு செய்து தீர்வுகள் பெற குறைதீர் ஏற்பாடுகள் (Grievance Mechanism) பிரதேச,மாவட்ட, தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

14. எந்தவொரு குறுகிய கால பேரனர்த்த நடவடிக்கையும் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கு முரணாகவோ அல்லது சமரசம் செய்வதாகவோ இருக்கக் கூடாது.

15. தோட்டப் பிரதேசங்களில் டித்வா பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாலங்கள், வீதிகள், படிகட்டுகள், பாதுகாப்புச் சுவர்கள் சமூக கட்டிடங்கள், என்பவற்றைச் சீர்திருத்தும் பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும். பிரதேச சபைகள் தோட்ட உட்கட்டுமான பணிகளுக்கு நிதியீட்டம் செய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சிமன்றங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்சொன்ன கொள்கைத் தீர்மானங்களை எடுத்து, நிர்வாகச் செயற்பாடுகளுக்கு உத்தரவிட்டு நிவாரண, மீள்கட்டுமான நடவடிக்கைகளை மலையகப் பிரதேசங்களில் துரிதப்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு அவசியமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முன்மொழிவுகள் குறித்துக் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கோரிக்கை விடுத்துள்ளது.

டித்வா பேரனர்த்தத்தால் பாதிப்புற்று அல்லலுறும் மலையக மக்கள் சார்பாக முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மலையக மக்களைப் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் தமது நிலைப்பாட்டினை ஏற்று அரசாங்கத்தில் தீர்மானம் எடுப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ள மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இணைந்து செயலாற்றவும் அழைப்பு விடுத்துள்ளது.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையம்மீது தாக்குதல்!

 

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி Natanz nuclear நிலையம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதிலடி நடவடிக்கையை ஈரான் தீவிரப்படுத்தும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று (21) தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

போரால் ஈரானில் இதுவரை ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் ஒரு குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது.

தீ விபத்தினால் வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றிலும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசித்த ஐந்து பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர்
செ.தி. பெருமாள்

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...