நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர்.
இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தினார்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதல் வாசிப்பு கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
குழு நிலை விவாதம் நொவம்பர் 15 முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் நடைபெற்ற பின்னர், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
மக்களுக்கு சலுகைகள் இல்லாத பாதீடே முன்வைப்பு: சஜித் கொதிப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50மூ மேலாக பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த வரவுசெலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் வேலைகள் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவுசெலவுத் திட்டமாக அமைந்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதை தவிர்த்து அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்காத, ஐ.எம்.எவ். எழுதிய வரவுசெலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவுசெலவுத்திட்டமாகும். வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடங்கி காணப்படவில்லை.
முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவு கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 2025 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளினதும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி அவர்கள் இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை.” – என்றார் சஜித் பிரேமதாச.
பாதீட்டில் மலையகத்துக்கான திட்டங்களை வரவேற்கிறது இதொகா!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025 ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில், மலையகத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தை தவிர புதிதாக வேறு எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பணவாக 200 ரூபா அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மேலும் , நுவரெலியாவில் IT Park
உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு திட்டங்களும் அமுல்படுத்தப்படும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, மலையகப்பகுதி IT துறை வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது எனவும், இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும். எனவே ஜனாதிபதியின் இந்த இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது எனவும் இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதுடைய உதயகுமார் சாருஜன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞரும், அவரது நண்பரும் கொழும்பில் இருந்து ஓட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றைய இளைஞர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நானுஓயாவில் விபத்து: மூவர் காயம்!
நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதி சந்தியில் வேனும், லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் வேனில் பயணித்த மூவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வழியில் பயணித்த லொறியும், நானுஓயாவில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து வேனும் ரதல்ல குறுக்கு வீதி சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் கவனக் குறைவால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வீ. தீபன்ராஜ்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வகையில் நியாயமான சம்பளம் அவசியம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுகின்றது. 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அது 1,550 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழிகின்றேன்.
1,550 ரூபா சம்பளத்துக்கு மேலதிமாக அரசாங்கத்தால் வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.
தோட்ட நிர்வாகம் 1,550 ரூபா வழங்கும், அரசாங்கம் 200 ரூபா வழங்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா கிடைக்கப்பெறும்.
தோட்டத் தொழிலாளர்கள் 25 நாட்கள் வேலைக்கு வந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய குத்தகை ஒப்பந்தம் 2042 இல் நிறைவு பெறுகின்றது. முறையாக நிர்வாகிக்கப்படாத பெருந்தோட்டங்கள் மீள பெறப்படும்.” – என்றார்.
ஊழல் வாதிகள் தப்பவே முடியாது: பாதீட்டு உரையில் ஜனாதிபதி திட்வட்டம்!
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பில் அறிவிப்பதற்காக கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், மேற்படி ஹிடலர் கதையைக்கூறி எதிரணிகளை ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அறிவிப்பு பற்றி இன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
“ ஹிட்லர் வந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர். நீங்கள் ரஷ்யாவா, நீங்கள் அமெரிக்காவா (எதிரணியை பார்த்து கேட்கின்றார்…) ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது வரலாற்றுக் கதை. அது உலக அரசியலில் முக்கிய திரும்பு முனை.
எதிரணிகள் எப்படியான விளக்கத்தை வழங்கினாலும் நாம் சட்டத்தை அமுலாக்குவோம்.
மக்களுக்கு அநீதி இழைத்திருந்தால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டனை வழங்குவோம். அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. எமது நடவடிக்கையை கைவிடமாட்டோம்.” – என்றார் ஜனாதிபதி அநுர.
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.















