Home Blog Page 224

பட்ஜட், தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்;வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது!

 

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 மற்றும் 52 வயதுடைய மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் பிரகாரம் மஸ்கெலியா பொலிஸார், திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

 

இந்திய அணியை சாம்பியன் ஆக்கிய டாப் 10 காரணிகள்

மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் 10 அற்புத தருணங்களை சற்று பார்ப்போம்.

இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என அனைவரும் புதிய உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பில்லியன் கண்களின் கனாவை பல சவால்களை கடந்து சாதித்துள்ளனர் இந்திய அணி வீராங்கனைகள்.

முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்து 1997 மற்றும் 2000-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி, பின்னர் 2005 மற்றும் 2017 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் இருந்தது இந்தியா. இந்நிலையில், இந்த முறை உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று காட்டியுள்ளது.

8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதற்கடுத்து தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி உடனான மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணி மீது வைக்கப்பட்ட விமர்சனம் மோசமாக இருந்தது. இதில் இங்கிலாந்து அணி உடன் 4 ரன்களில் தோல்வியை தழுவி இருந்தது.

இந்தச் சூழலில் கட்டாய வெற்றி என்று நெருக்கடி நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற்று, அரையிறுதிக்கு 4-வது அணியாக தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியில் இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது. இதில் ஆடும் லெவனில் இடம்பிடித்தவர்கள், பயிற்சியாளர் குழு, களத்தில் அணி நிர்வாகம் சொன்ன தூதுகளை கடத்திய இதர வீராங்கனைகள் என அனைவரது உழைப்பும் உள்ளது. மீண்டெழுதலுக்கு (Resilience) சிறந்தவொரு உதாரணமாக திகழ்கிறது இந்தியா.

தேசம் இந்தியாவின் வெற்றியை கொண்டாடுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் மகளிர் உலகக் கோப்பை தொடர் பல கோடி மக்களின் கவனத்தை பெற்றது இந்தியாவின் அரையிறுதி வெற்றிக்கு பிறகுதான். இனி இந்திய மகளிர் அணி மீதான கவனமும், மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வமும் பன்மடங்கு பெருகும்.

உலக கோப்பை தொடரில் இந்தியாவின் சிறப்பான டாப் 10 மேஜிக் தருணங்கள்…

ஜெமிமாவின் சதம்: இந்தத் தொடரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக விளையாடி வந்தார். முதல் நான்கு ஆட்டங்களில் இரண்டு முறை டக் அவுட் ஆனார். மற்ற இரண்டு ஆட்டங்களில் 32 மற்றும் 33 ரன்களை எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து உடனான ஆட்டத்தில் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன் பின்னர் நியூஸிலாந்து அணி உடனான ஆட்டத்தில் 3-ம் இடத்தில் இறங்கி 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

நெருக்கடி நிறைந்த அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் 339 ரன்கள் டார்கெட்டை இந்தியா வெற்றிகரமாக கடக்க ஜெமிமாவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. இறுதிவரை களத்தில் இருந்த அவர், சதம் விளாசி, ‘இந்தியா இறுதிக்கு முன்னேறியது’ என்ற இனிதான முடிவுரையுடன் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றார்.

அமன்ஜோத் கவுரின் அற்புத கேட்ச்: தென் ஆப்பிரிக்க அணி உடனான வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய வீராங்கனைகளில் அமன்ஜோத் கவுரும் ஒருவர். அவர் 51 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க இணையை ரன் அவுட் செய்து பிரித்தார். பீல்டிங்கில் பந்தை பற்றியதும் ஸ்டம்புகளை நோக்கி எறிந்து கணநேரத்தில் அதை தகர்த்தார். அது இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்று கொடுத்தது.

சதம் கடந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாராவை கேட்ச் பிடித்து வெளியேற்றினார். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அந்த கேட்ச்சை தட்டி தட்டி பிடித்தார் அமன்ஜோத். அப்போது, ரசிகர்களின் ஹார்ட் பீட் எகிறி, பின்னர் இன்ப அதிர்ச்சியில் திளைத்தது.

ஸ்மிருதி மந்தனா: இந்திய அணியின் ரன் மெஷினான ஸ்மிருதி மந்தனா, இந்தத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 434 ரன்கள் எடுத்து அசத்தினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி உடனான ஆட்டத்தில் அரை சதம் கடந்தார்.

நியூஸிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 109 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் இந்தியா அதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ‘இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன்’ என்று அந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்மிருதி தெரிவித்தார். இறுதிப் போட்டியில் ஷெஃபாலி உடன் சத கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

கிராந்தி கவுட்: இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டில் பிராதான அங்கம் வகித்தவர் கிராந்தி கவுட். இந்தத் தொடரில் 8 ஆட்டங்களில் 378 பந்துகள் வீசி 361 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தனது ஆட்டத்தை பெரிய திரையில் பார்த்து தன் ஊர் மக்கள் மகிழ்வார்கள் என அந்த போட்டியின் போது அவர் தெரிவித்திருந்தார்.

பிரதிகா ராவலின் மாயம்: இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகளில் ஒருவரான பிரதிகா ராவல் 7 ஆட்டங்களில் விளையாடி 308 ரன்கள் எடுத்தார். லீக் சுற்றில் நியூஸிலாந்து அணி உடனான வாழ்வா சாவா ஆட்டத்தில் 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுடன் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

துரதிர்ஷ்டவசமாக வங்கதேச அணி உடனான ஆட்டத்தில் ஃபீல்ட் செய்தபோது காலில் காயமடைந்தார். அதனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு ஆளானார். இந்தத் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதும் சக்கர நாற்காலியில் மைதானம் வந்து வெற்றியை கொண்டாடினார். 2 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் அவர் கைப்பற்றி உள்ளார்.

ஃபைனலில் ஷெஃபாலி வர்மாவின் அதிரடி: பிரதிகா ராவலுக்கு மாற்றாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் இளம் வீராங்கனையான ஷெஃபாலி. அரையிறுதியில் அவர் ஏமாற்றிய நிலையில், இறுதிப் போட்டியில் 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

இதே ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை அவர் வென்றார். கடந்த 2023 இளையோர் டி20 உலகக் கோப்பையை வென்றபோது சீனியர் அணியுடன் இதே வெற்றியை பதிவு செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். இப்போது உலகக் கோப்பையை சொன்னபடி வென்றுள்ளார்.

ரிச்சா கோஷின் கேமியோ: இந்திய அணியின் ரிச்சா கோஷ் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தத் தொடரில் 8 ஆட்டங்களில் 235 ரன்கள் எடுத்தார். அதில் 12 சிக்ஸர்களை அவர் விளாசி உள்ளார். இந்த சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்டர்களில் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி உடனான இறுதி ஆட்டத்தில் 24 பந்துகளில் 34 ரன்கள் விளாசி இருந்தார்.

தீப்தி சர்மாவின் ஆல் ரவுண்ட் பர்ஃபாமென்ஸ்: இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸில் 215 ரன்கள் எடுத்துள்ளார் தீப்தி சர்மா. இதில் 3 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். 9 ஆட்டங்களில் மொத்தம் 81.2 ஓவர்கள் வீசி 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராக அறியப்படுகிறார். இறுதிப் போட்டியில் அரை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். தொடர் நாயகி விருதையும் அவர் வென்றார்.

வரலாற்று ரன் விரட்டல்: அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இந்தத் தொடரில் அந்த ஆட்டம் இந்தியாவின் கோப்பை வேட்கைக்கு சரியான வேட்டையாக இருந்தது. அதில் ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோரின் ஆட்டம் ‘எங்களுக்கு வேர்ல்ட் கப் ரொம்ப முக்கியம்’ என எதிரணிக்கு சொல்வது போல இருந்தது.

கேப்டன் ஹர்மன்பிரீத்: இந்தத் தொடரில் இந்திய அணியின் துல்லிய செயல்பாட்டை கட்டமைத்தவர்களில் ஒருவர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இந்திய அணியின் தலைமகள். ஆடும் லெவனில் மாற்றம், வீராங்கனைகளின் காயம், அதற்கான ரீபிளேஸ்மென்ட்கள், ஆட்டத்தின் தருணத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடி என அனைத்தையும் திறம்பட செய்து வெற்றி கண்டார் ஹர்மன். இந்தத் தொடரில் 8 இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களை எடுத்துள்ளார். அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதியில் 89 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான அந்தக் கடைசி விக்கெட்டுக்கான கேட்ச்சை ஓடிய படி பிடித்து அசத்தினார் ஹர்மன். அந்த வெற்றி தருணம் கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கும் நிற்கும். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அற்புதமானதாக அமைந்தது.

டில்லி பறந்தார் சஜித்: முக்கிய சந்திப்புகளுக்கும் ஏற்பாடு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை டில்லி நோக்கி சென்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் பற்றி இவ்விஜயத்தின்போது கலந்துரையாடுவார்.

இந்திய எதிர்க்கட்சி தலைவரையும், சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அதிகாரபூர்வ நிகழ்வுகளிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்வார் என தெரியவருகின்றது.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆம் அதிகரித்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள், கட்டடங்கள் குலுங்கியதை கண்டு, சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். மேலும்,150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட மூன்று நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் முன்னாள் பள்ளி டிச்சர் ரஹிமா கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, தனது குழந்தைகள் படிக்கட்டுகளில் இருந்து கத்திக் கீழே ஓடினர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அலங்கார மீன் உற்பத்தி: சாத்தியப்பாடு குறித்து ஆராய்வு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள ஹரித்த அலங்கார மீன் உற்பத்தி பண்ணைக்கு அமைச்சர் சென்றிருந்தார். அங்கு அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுப்பாட்டர்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, அலங்கார மீன் உற்பத்தி துறையைச் சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

அலங்கார மீன் உற்பத்தி துறை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய புதுமையான தொழில்துறையாக கருதப்படுகிறது. உலகளவில் அலங்கார மீன் சந்தைக்கு நிலவும் அதிகமான தேவை காரணமாக, இலங்கை அதில் முக்கிய பங்காற்றும் திறன் கொண்டது என்பதை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

அலங்கார மீன் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் நேரடியாக கலந்துரையாடி, தற்போதைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் நிலவும் சவால்கள், உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாடு, தரநிலைகள், மற்றும் சர்வதேச சந்தை அணுகல் குறித்த பிரச்சினைகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயற்கை வளங்களும் நீர்வளங்களும் பரவலாக காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் அலங்கார மீன் உற்பத்தி பண்ணைகளை ஆரம்பிக்க மிகுந்த வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அரசாங்க ஆதரவுகள், பயிற்சி திட்டங்கள் போன்றவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், அலங்கார மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையை தேசிய அளவில் மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகளும் இடம்பெற்றன.

 

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

 

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திர பிரசாத், “

இந்த விபத்தில் இதுவரை இருபது பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சிறு காயங்களுடன் உள்ள 6 பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நீண்ட வரலாற்றில் வித்யாலங்கார பிரிவேனா நாடு, தேசம், மதம், தர்மம் மற்றும் மொழிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. சிங்களம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை நோக்காகக் கொண்டு பிக்குகளுக்குத் தேவையான கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சமகாலத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு என்பனவும் வழங்கப்படுகிறது.

வித்யாலங்கார பிரிவேனாவின் புதிய இணையத்தளத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு ‘யெலசிய அபிமன்’ கல்வித் தொகுப்பு மற்றும் நினைவுத் தொகுப்பு என்பன ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அமராபுர மகாநிகாயவின் மகாநாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், ராமான்ய மகாநிகாய மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய மகுலேவே விமல தேரர், அமெரிக்காவின் வொஷிங்டன் மேரிலாந்து விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், பிரபல நடிகர் ரவீந்திர ரந்தேனிய, ஓய்வுபெற்ற சிரேஸ்ட பேராசிரியர் தர்ஷன ரத்நாயக்க ஆகியோருக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வித்யாலங்கார இறுதிப் பரீட்சையின் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

இந்த வித்யாலங்கார பிரிவேனாவை நமது நாட்டில் நவீன கல்வியின் மையம் என்று அழைக்கலாம். வித்யாலங்கார பிரிவேனா கல்வித் துறையில் பெரும் பங்காற்றியது. இந்த வழிபாட்டுத் தலம் மிகப்பெரிய சமூகப் பணிகளைச் செய்த பிக்குமார்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்யாலங்கார பிரிவேனா கல்வித்துறையில் மட்டுமல்ல, நமது கிராமங்களுக்குத் தேவையான ஒழுக்கமான பிக்குகளை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியது. இது நமது கிராமங்களில் பிரிவேனா கல்விக்கான ஆசிரியர்களை உருவாக்கும் மையமாகவும் மாறியது. பௌத்த தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம் சரியானதைக் கண்டறிய பாடுபடும் ஒரு மையம் இது.

வித்யாலங்கார பிரிவேனா என்பது உள்நாட்டு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களும் படிக்கும் ஒரு சிறந்த கல்வி மையமாகும். 1940களில், அக்கால ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பிக்குகள் செயல்படத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த குழுக்கள் பிக்குகளுக்கு எதிராக ஒரு புதிய வகை அரசியல் பிக்குகளாக புதிதாக பிக்குகளை உருவாக்கினர். புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றும் பிக்குகளின் தலைமுறை ஒன்றும், மறுபுறம், கேலிக்கூத்தான அரசியல் பிக்குகளின் தலைமுறை என்று கூறப்படும் ஒரு புதிய வகையை உருவாக்கினர். இந்த நாட்டில் பிக்கு தலைமுறை நமது சமூகத்துடன் பிணைப்பைக் கொண்டுள்ளது. அவர்களின் சமூக செயல்பாடு ஆட்சியாளர்களின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 1946 மார்ச் 14 ஆம் திகதி வித்யாலங்கார பிரிவேனா பிரகடனம் என்ற பெயரில் பிக்குகளும் அரசியலும் என்ற வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தின் மூலம் பிக்குகளின் சமூகப் பணிகளில் மிக முக்கியமான திருப்புமுனை வெளியிடப்பட்டது.

ஒரு ஆட்சி வீழ்ச்சியடைந்தால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதற்கு இணையாக பௌத்த மதத்தின் மீதான தாக்கமும் தவிர்க்க முடியாதது என்பது அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிகாட்டப்ட்டிருந்தது. எனவே, பிக்குகளின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஏதாவது திட்டம் இருந்தால், அதில் அரசியலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபடுவது பிக்குவுக்கு உகந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது நமது பிக்குகளுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.பிக்குகளை மையமாகக் கொண்டு பரப்பப்பட்ட அவதூறுகள் இந்த அறிக்கையில் பலமான முறையில் தகர்க்கப்பட்டது. இந்த கருத்தாடல் இலவச கல்விச் சட்டத்துடன் தான் அன்று கட்டமைக்கப்பட்டது. இலவச கல்விச் சட்டம் தொடர்பாக வித்யாலங்கார பிரிவேனாவை மையமாகக் கொண்ட பெரும் எழுச்சி மிகவும் வலுவான வெற்றிக்கு வழிவகுத்தது.

1947 இல் ‘காலய’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போன்று வித்யாலங்கார பிரிவேனா பிக்குகள் மற்றும் சமூகத்திற்கு நல்ல விடயங்களைக் கொண்டுவரும் ஒரு பாரிய மையமாக மாறியுள்ளது. 150 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட வரலாறாகும்.

இந்த மாபெரும் வித்யாலங்கார பிரிவேனா 150 ஆண்டுகளாக மிகவும் வலிமையானது மற்றும் நமது பௌத்த தர்மம், சமூகம் மற்றும் பிக்கு சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வரலாற்றுப் பொறுப்பு தற்போதைய பரிவேனாதிபதி தேரர் மற்றும் எங்கள் பிக்குகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பணியை அவர் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் வலுவான எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது.

2005 இல் தொடங்கிய இந்தப் பிரிவேனாவின் நிர்மாணப் பணிகள் 20 ஆண்டுகளாக நிறைவு செய்யப்படவில்லை. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவு கொண்ட ஒரு நாட்டில் ஒரு கட்டிடத்தைக் கட்டித் திறக்க 20 ஆண்டுகள் ஆகும் என்றால், நாம் எந்தளவு கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். 2005 இல் செலவிடப்பட்ட பணத்தின் பயன்கள் 2025 தான் கிடைக்கிறது என்றால் பொதுமக்களின் பணத்திற்கு நாம் நியாயத்தை நிலைநாட்டவில்லை. அரச பொறிமுறையில் உள்ள திறமையின்மை, குழப்பகரமான தன்மை என்பவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை அமைச்சர் ஹினிதும சுனில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது மின்சார இணைப்பு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.கம்பிகள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.இந்தளவு புனிதமான இடத்தில் உள்ள கம்பியை பாதுகாக்க முடியாவிட்டால், நாடு எங்குள்ளது?

போதைப்பொருள்தான் இதற்கு முக்கிய காரணம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ளள கம்பியைப் பாதுகாக்க அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள யானைகள் வேலியில் வைக்கப்பட்டுள்ள பெட்டரியை திருடப்படுகிறது. எனவே, இந்தக் கட்டிடத்தில் உள்ள பாரிய கம்பி வெட்டப்பட்டதன் பின்னணியில் உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, நமக்கு ஒதுங்க முடியாத பொறுப்பு உள்ளது.

இந்த போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்த போதைப் பொருட்கள் நாம் நினைத்துப் பார்க்காது துறைகளுக்கும் பரவியுள்ளன. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல் மற்றும் வாதங்கள் இருக்கலாம். ஆனால் இந்த பேரழிவைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை தகர்க்க முடியாது. நாம் தவறு செய்தால், கிராமத்தில் உள்ள விகாரையின் பிக்குவைத்தான் குறை கூறுவோம். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக உறவும் வரலாற்று பாரம்பரியமும் உள்ளது. இந்த சமூகத்திற்கு மீண்டும் பிக்குவின் மரபு தேவை. இந்த நாட்டிற்கு ஏற்பட்ட ஒவ்வொரு பேரழிவிலும், பிக்குகள் முன்வந்து செயற்பட்டுள்ளனர்.

நாட்டுக்கும் மக்களின் நலனுக்காக அவர்கள் எவ்வளவு பணியாற்றியுள்ளனர்? நமது நாட்டை மீட்டெடுக்க அத்தகைய பிக்குமார்களின் தலையீடு அவசியம். அந்தத் தலையீட்டைச் செய்ய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர், வணக்கத்துக்குரிய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் , அனுநாயக்க தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், தூதுவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நுகேகொடை கூட்டத்தில் ரணில், மஹிந்த பங்கேற்பு?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை களமிறக்குவதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பங்கேற்றாலும் அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே கூட்டத்தில் உரையாற்றாவிட்டாலும் , வந்து அமர்ந்திருக்குமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

நுகேகொடை கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதால் அக்கூட்டத்தின் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

கொட்டகலையில் விபத்து: இரு வாகனங்கள் சேதம்!

0
மலைவாஞ்சான் நுவரெலியா கொட்டகலை பிரதான வீதியில் பஸ் கெப் நேருக்கு நேர் விபத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொட்டகலை, நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்றும், கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்...

நீலகாமம் பிரகடனம் வெளியீடு: 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

0
“நீலகாமம் பிரகடனம் எதிர்வரும் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டம், காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்த...

நவீனமயமாக்கப்பட்ட மருதானை ரயில் நிலையம் திறப்பு!

0
'Clean Sri Lanka' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, 'Dream Destination' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. புகையிரத...