Home Blog Page 34

பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மணிலாவில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா தெரிவிப்பு!

ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானியக் கப்பல், அதன் 208 பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் அனைத்துலக சட்டக் கடப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளில், 22 பேர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, கொக்கல விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 10 பேரும் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

230 ஈரானிய கடற்படையினருக்கு 30 நாள் சலுகை விசா?

இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கு, 30 நாள் சலுகை நுழைவிசைவு வழங்கப்படும் என்று வழங்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.

ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரில் இருந்த 208 பேரும் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு நுழைவிசைவுவழங்குவது தொடர்பான நடவடிக்கைக்கு நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானிய குழுவிற்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்திடமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய அனைத்துலக சட்டங்களின்படி, அவர்களைத் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு: அடுத்தவாரம் விசாரணை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் ஜேவிபி-என்பிபி அமைச்சர் ஒருவர் மீதான முதல் வழக்கு இதுவாகும்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டில் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

2014ஆம் ஆண்டு, லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய போது, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தேவையற்ற நிதி இலாபம் ஈட்ட அனுமதித்ததன் மூலம், சிறிலங்கா அரசுக்கு 8.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, குற்றப்பத்திரத்தில் 21 சாட்சிகளை அழைக்கவும், 29 நீதிமன்ற தயாரிப்புகளை சமர்ப்பிக்கவும் அரசு தரப்பு பட்டியலிட்டுள்ளது.

இறந்த பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை!

ஊடகவியலாளர் – பா. நிரோஸ் 

நன்றி தமிழன் பத்திரிகை

நுவெரலியா – டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்ட விசாரணகளில், முன்வைக்கப்படும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்த நிலையில், டிக்கோயா வைத்தியசாலையில் பெண்ணின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது, வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பிணவறைக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மலையகத்தின் பிரபல அரசியற் கட்சியின் ஆதரவாளர்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல் மீது அங்கிருந்த ஊழியர்கள் உடலுறவு கொண்டதாக தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மேற்குறித்த அரசியற் கட்சியின் சார்பில் அவர்களது ஆதரவாளர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டங்களை தொடர்ந்து நுவெரலியா மாவட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விவகாரம் பற்றி பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்ததோடு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இதுபற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.

கடந்த மாதம் பெப்ரவரி 23ஆம் திகதி திங்கட்கிழமை தற்கொலை செய்து உயிரிழந்த பெண்ணின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அவருக்கு மறுநாள் 24ஆம் திகதி பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் 25ஆம் திகதி புதன்கிழமை பிணவறைக்கு பொறுப்பான வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ”பெண்ணின் உடலை பிணவறையில் இரவு வைத்திருந்த இடத்துக்கும் மறுநாள் காலையில் பெண்ணின் உடல் இருந்த இடத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தது” என டிக்கோயா வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் 27ஆம் திகதி வெளிக்கிழமை மூவரடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு, பிணவறை பகுதியின் சிசிடிவி காட்சிகளை அந்த குழு ஆராய்ந்ததில் சந்தேகத்துக்கு இடமான விடயம் ஒன்றை அதவானித்துள்ளனர்.

அதாவதுஇ வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் இரவு நேரத்தில் மூன்று தடவகைள் பிணவறைக்குள் சென்று வந்திருப்பது சிசிடிவி வீடியோவில் தெரியவந்துள்ளது. முதல்முறை செல்லும்போது ஒரு ஊழியர் தனியாக பிணவறைக்கு சென்று வருவதும் பின்னர் ஏனைய இருவரை பிணவறைக்கு அழைத்துகொண்டு மூவருமாக செல்வதும், பின்னர் மீண்டும் இரவில் முதலாவது சென்றிருந்த நபர இறுதியாக உள்ளே சென்று வருவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
மூன்று தடவைகள் பிணவறையின் உள்ளே வைத்தியசாலையின் ஊழியர்கள் சென்றிருந்தாலும் சில வினாடிகளிலேயே அவர்கள் வெளியே வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, குற்றச்சாட்டப்படுவதுபோல இறந்த பெண்ணின் உடல்மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், சில வினாடிகளுக்குள் உள்ளே சென்ற ஊழியர்கள் திரும்பி வெளியே வந்தது எவ்வாறு? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து பிணவறைக்கு முதல்முறை சென்றிருந்த சிற்றூழியரை காணவில்லை எனவும் அவர் பற்றிய தகவல் இல்லை எனவும் இவரை பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் வைத்திய அதிகாரி மொஹமட் பாரூக் மொஹமட் பஸ்லி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் ஏனைய இரு ஊழியர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளின் முடிவில், பிணவறைக்கு செல்ல அவசியமில்லாத ஊழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பிணவறைக்கு சென்றது தவறு என்றும் ஆனால், பெண்ணின் உடலை வைத்தியசாலையின் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என தெரியவந்திருப்பதாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பிணவரையில் 6 உடல்களை குளிரூட்டியில் ஒரே தடவையில் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இருந்தும், உயிரிழந்த பெண்ணின் உடலை பிணவறைக்குப் பொறுப்பான வைத்தியசாலையின் ஊழியர் தரையில் வைத்திருந்தது தவறு எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் உள்ளக விசாரணைகளுக்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியரடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த விசாரணைகளின்போதும் இறந்த பெண்ணின் உடல்மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொண்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களும் கண்டறியப்படவில்லை என குழுவின் விசேட வைத்தியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

மேலும்இ பெண்ணின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மறுநாளே அதாவது வைத்தியசாலையின் ஊழியர்கள் இரவு நேரத்தில் உள்ளே சென்று வந்திருந்த மறுநாளே சட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பரிசோதனை அறிக்கையிலும் பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக்கான சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு சாட்சியங்களும் கண்டறியப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த விசேட வைத்தியர் மேலும் எமக்கு தெரிவித்தார்.

வைத்தியசாலைக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களால் வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்கள் மீது முன்வைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, பெண்ணின் உடல்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறயினும்இ உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் இச்சம்பவம் பற்றி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழன் பத்தரிகை
09.03.2025

மரக்கறி விலைப்பட்டியல் (09.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

​கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி

“அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?”
​சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி என அடுக்கடுக்கான தடைகளையும் தாண்டி, ஒரு சமூகமாக இந்த மக்கள் சாதித்துக் காட்டுவது வியக்கத்தக்கது. வெறும் 175 மாணவர்கள் மட்டுமே பயிலும் ஒரு பாடசாலை, மிகக் குறுகிய காலத்தில் 47 பல்கலைக்கழகப் பட்டதாரிகளை உருவாக்கியது எப்படி? கலாசார சிதைவுகளுக்கு மத்தியில் ‘காமன்கூத்து’ எனும் மண்ணின் கலையை மாணவர்கள் முன்னெடுப்பது எதைக் காட்டுகிறது? கந்தலோயா பாடசாலையில் நான் கண்ட கூட்டுப்பொறுப்பும், அந்த மண்ணின் துணிச்சலும் மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வலிமையான அடையாளங்கள். எனது பயணத்தின் சில ஆழமான அவதானிப்புகள் இதோ…

​1. தனித்துவமான புவியியல் அமைவிடம்

​கந்தலோயா பாடசாலை அமைந்துள்ள விதம் அதன் நிர்வாக மற்றும் தொடர்பு எல்லைகளால் ஒரு சுவாரசியமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தப் பாடசாலை சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில் அமைந்திருந்த போதும், இதன் தபால் முகவரி கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி ஆகும். மாகாண எல்லைகளுக்கு இடைப்பட்ட இத்தகைய அமைவிடம், அந்த மக்களின் அன்றாட வாழ்வியலில் உள்ள சவால்களை ஒருசேரக் காட்டுகிறது.

​2. தேசிய இன அடையாளம்

​மலையகத் தமிழர்கள் இந்த நாட்டின் மற்றுமொரு தேசிய இனம். ஒரு தேசிய இனத்திற்குரிய நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றைத் தக்கவைத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு நமக்குண்டு. அண்மையில் ஏற்பட்ட டித்வா அனர்த்தத்தினால் இந்தப் பாடசாலை பாதிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் தளரவில்லை. இழந்த பொருளாதாரத்திற்கும், சொந்தமில்லாத நிலத்திற்கும் மத்தியில், தங்கள் மொழியையும் அடையாளத்தையும் அவர்கள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

​3. கூட்டுப்பொறுப்பும் தன்னார்வப் பங்களிப்பும்

​சமூகத்தின் வெற்றிக்கு கூட்டுப்பொறுப்பு மிக முக்கியமானது என்பதை கந்தலோயா நிரூபித்துள்ளது. தகுந்த சூழலும் சந்தர்ப்பமும் கிடைக்கும்போது, எளிய மக்களும் சாதனைகளை படைப்பார்கள் என்பதற்கும், தலைவர்களை உருவெடுப்பார்கள் என்பதற்கும் இந்தப் பாடசாலை உருவாக்கியுள்ள களமே சாட்சி.

​விடுதி வசதிகள்: அரசசார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன் மாணவர்களுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தூர பிரதேச மாணவர்கள் தங்கியிருந்து தடையின்றி கல்வியைத் தொடர்வது பாடசாலையின் மிகப்பலமான ஒரு செயற்பாடாகக் கருதப்படுகிறது.

​அறிவுத்தளம்: பாடசாலையின் வாசிகசாலை மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரும் களமாக அமைந்துள்ளது. புத்தகங்களுடன் அவர்கள் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பு, புதிய சிந்தனைகளை விதைக்கின்றது.

​நிர்வாகம்: அதிபரின் எளிமையான வழிநடத்தல், முழு சமூகத்தையும் அணிதிரட்டி எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

​4. விளையாட்டுப் போட்டிகள்: வரலாற்றை மீட்டெடுத்தல்

​பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மீனாட்சியம்மாள், ஆதிலெட்சுமி போன்ற வரலாற்றுப் பெயர்களை இல்லங்களுக்குச் சூட்டுவது என்பது வெறும் அடையாள மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்தும் அரசியல் மற்றும் கலாசாரச் செயல்பாடாகும்.

​பெண் தலைமைத்துவமும் வரலாற்று முக்கியத்துவமும்: முல்லோயா போராட்டக்களத்தின் வீராங்கனை மீனாட்சியம்மாள் மற்றும் தியாகத்தின் அடையாளமான ஆதிலெட்சுமி போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் மறைக்கப்பட்ட மலையகப் பெண் தலைமைத்துவங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

​பாடத்திட்டத்திற்கான அழுத்தம்: இத்தகைய செயல்பாடுகள் முறைசார் கல்வியில் உள்ள இடைவெளியை நிரப்புகின்றன. இது வருங்காலப் பாடத்திட்ட மறுசீரமைப்புகளில் மலையக வரலாறு இடம்பெற ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது.

​5. காமன்கூத்து: ஒரு கலாசாரப் புரட்சி

​இந்தியச் சினிமா மலையகக் கலாசாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கந்தலோயா மாணவர்கள் நிகழ்த்திய காமன்கூத்து ஒரு மாற்று அரசியலை முன்வைத்தது.

​பெண் ஆளுமை: தப்பு இசைப்பது முதல் பாத்திரம் ஏற்று நடிப்பது வரை பெண்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

​பாதுகாப்பு: மாணவிகளின் பாதுகாப்பை வகுப்புத் தோழர்களே பொறுப்பேற்று உறுதி செய்தது அந்தச் சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

​மீண்டெழுதல்: அனர்த்தத்தால் சிதைந்த விளையாட்டு மைதானத்தையே ‘காமன் பொட்டலாக’ மாற்றி, மக்கள் அணிதிரண்டு தங்கள் இருப்பை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளனர். காமன்கூத்து நிறைவடைந்தவுடன் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒரு சமூகமாக இணைந்து செயற்பட்டமை அவர்களின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தியது.

​6. கல்விச் சாதனைகள்

​வெறும் 175 மாணவர்களைக் கொண்ட ஒரு சிறிய பாடசாலை என்ற போதிலும், மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் 47 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி இந்தப் பாடசாலை ஒரு கல்விப் புரட்சியையே நிகழ்த்தியுள்ளது. இந்தப் பட்டதாரிகள் இன்றும் தமது பூர்வீக கிராமத்துடனும், மலையகச் சமூகத்துடனும், தாய்ப்பாடசாலையுடனும் கொண்டுள்ள இடைவிடாத பற்றுறுதி வியக்கத்தக்கது.

​7. தீர்வு மற்றும் முடிவுரை: விழாக்களும் யதார்த்தங்களும்

​கந்தலோயா பாடசாலையின் காமன்கூத்து மற்றும் பல நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை பல அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இத்தகைய நிகழ்வுகள் பாராட்டுகளைப் பெற்றாலும், ஒரு கசப்பான உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது.
​தன்னார்வ அமைப்புகள் மாணவர்களின் கல்விக்காக விடுதிகளை அமைத்துத் தந்துள்ள அதேவேளை, மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய அரச பிரதிநிதிகள், அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான அரங்கம் (Hall) மற்றும் முறையான போக்குவரத்துப் பாதைகளைச் (Roads) சீர்செய்யத் தவறியுள்ளனர்.

​விழாக்களில் பங்கேற்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அந்த ஊருக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி மக்களின் இருப்பை உறுதி செய்வதே உண்மையான மக்கள் சேவையாகும்.

​”வரலாற்றைத் தெரிந்த சமூகம் தான் எதிர்காலத்தைச் சரியாகக் கட்டமைக்க முடியும்.” இந்த அடிப்படையில், வரலாற்றைத் திரிபுகளின்றி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் இந்தப் பாடசாலையின் கூட்டுப்பொறுப்பு, மலையகத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது.

​பின்குறிப்பு: பாடசாலைச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள “இவர்களில் நீங்கள் யார்?” என்ற வாசகம் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அங்குள்ள அனைவரும் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய தலைவர்களே!

​எழுதியவர்: வேலு இந்திரசெல்வன்

10 ஆவது நாளாக தொடரும் போர்: புதிய உச்ச தலைவரை நியமித்தது ஈரான்!

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, அங்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் மொஸ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகக்கிண்ணத்தை வென்றது இந்தியா அணி!

ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது.

20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், இஷான் கிஷன் 25 பந்துகளில் தலா 4 சிக்ஸர், பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18, சூர்யகுமார் யாதவ் 0, திலக் வர்மா 8, ஷிவம் துபே 26 ரன்கள் எடுத்தனர்.

2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8 ரன்களில் நடையை கட்டினர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பீல்டிங்கின்போது இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு 3 கேட்ச்களை பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது.

இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துஅணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.

பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது. ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

6 மாதங்களுக்கு போர் செய்ய முடியும்: நவீன ஏவுகணைகளும் கைவசம் என்கிறது ஈரான்!

 

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரியாத்தை நோக்கிச் சென்ற ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது.

மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகள் முஹாரக் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், தெஹ்ரானின் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமையன்று தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகள் சரிந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதலாக இது கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில் உள்ள முக்கிய தளபதிகளை குறிவைத்து, பெய்ரூட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் துல்லியமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று (மார்ச் 8) ஈரான் முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியது.

லெபனானின் சுகாதார அமைச்சகம், ஹோட்டலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் ‘நாங்கள் முழு பலத்துடன்’ தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்,

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (மார்ச் 8) தங்களால் தற்போதைய சண்டை வேகத்தில் ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை நடத்த முடியும் என்று கூறியது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “ஈரான் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது, ஆனால் வரும் நாட்களில் மேம்பட்ட மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும்” என்றார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...

மரக்கறி விலைப்பட்டியல் (05.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அஞ்சமாட்டோம்: ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்தது ஈரான்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை திறக்க அல்லது புதிய உடன்படிக்கையை எட்ட 48 மணிநேரக் கெடுவை...