Home Blog Page 3548

” சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்” – கமல் அறிவிப்பு

அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

” கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்.

அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன். எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார். அதே போல நானும் நடிப்பேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா என பிறகு முடிவு எடுப்பேன். அரசியலில் சில மிரட்டல்கள் வந்தன.” – என்றார்.

கித்துல்கலவில் இடம்பெற்ற விபத்தில் டயகம இளைஞன் பலி!

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இவ்விபத்து 04.04.2021 இன்று காலை இடம்பெற்றுள்ளது.

டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மோட்டர் சைக்களின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே வாகன இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன் (வயது – 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கித்துல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் – வெளியாகிறது விசேட வர்த்தமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ட்ரூ சிலோன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினால், சம்பளம் நிர்ணயிக்கப்பட்டமையினாலேயே, கூட்டு ஒப்பந்தம் இரத்தாகின்றது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் – பேராயர் வலியுறுத்து

உயிரித்த ஞாயிறு தாக்குதலை சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (4) வலியுறுத்தியுள்ளார்.

” தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளியானபோதிலும், தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பை மறந்து மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ளார். விசாரணை அறிக்கையிலும் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல பொறுப்புகூறவேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை அவசியம். இது விடயத்தில் 21 ஆம் திகதிக்குள் முன்னேற்றம் அவசியம்.இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்.” – எனவும் பேராயர் எச்சரிக்கை விடுத்தார்.

பசறையில் வீதிமறியல் போராட்டம் முன்னெடுப்பு

லுணுகல நகர வீதியை அகலப்படுத்தி புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பிரதேச மக்களும், முச்சக்கர வண்டி சாரதிகளும் வீதிமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.

இன்று முற்பகல் 11 மணி முதல் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் லுணுகல – பசறை வீதியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரையான போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

நகரின் இருமருங்கிலும் வர்த்தக நிலையங்கள் காணப்படுவதோடு வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இடப்பற்றாக்குறை நிலவுவதால் வீதியை அகலப்படுத்தி தருமாறு உரிய அதிகாரிகளுடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜ்

மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! 11 கட்சிகள் மேதினத்தில் தனிவழி!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 பங்காளிக்கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. இதனால் பொதுஜன பெரமுன கட்சி கடுப்பில் உள்ளது. தனியே மே தின நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, இதர கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மே தின நிகழ்வு மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவருகின்றன.

கொரோனா வைரஸ் பரவவால் கடந்தவருடம் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது. சிறு அளவிலான நிகழ்வுகளே இடம்பெற்றன.

இந்நிலையில்  இம்முறை மே தினத்தை உரிய வகையில் அனுஷ்டிப்பதென அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரிவுகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார தரப்புகளுக்கு அறிவித்து அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், பேரணிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்த வடக்கு கிழக்கில் நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை பேராயர் இராயப்பு ஜோசப் காலமானதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனை வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த’பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு- கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மட்டக்களப்பு பல் சமயங்களின் ஒன்றியம், முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு,

மட்டக்களப்பு வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு சடோ லங்கா நிறுவனம், அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், மட்டக்களப்பு தமிழர் நலன் காப்பகம், யாழ். சிவகுரு ஆதீனம், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, திருகோணமலை புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், திருகோணமலை இராவண சேனை, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் இணைந்து இதனை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தி, தமிழர் தேசத்தை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆயரின் இழப்பு, தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும்.அவரின் இழப்பால் தமிழ்த் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது.

தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.

தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக் குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்துநிற்கின்றோம்.

ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், நாளை திங்கட்கிழமை (05) தமிழ்த் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப் படுத்துகின்றோம்.

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அந்த அறிக்ைகயில் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மலையகத்திலும் ஈஸ்டர் தின விழா கொண்டாட்டம்

ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மலையக கிறிஸ்தவ ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில் 04.04.2021 இன்று நடைபெற்றன.

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் தேவ ஆராதனைகள் ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் நடைபெற்றன.

இதன் போது ஈஸ்டர் தின திருப்பலி ஒப்புக்கொடுத்தல் இடம்பெற்றதுடன், ஈஸ்டர் தினத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டன.

அத்தோடு, நுவரெலியா, புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தின் ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய பங்கு தந்தை அருட் சுதத் ரோகன பெரேரா தலைமையில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 03.04.2021 அன்று இரவு முதல் இன்று வரை பல தேவ ஆராதனைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்த தேவ ஆராதனைகளில் மட்டுப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ அடியார்களே கலந்து கொண்டதுடன் இரண்டு மொழிகளிலும் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் இராணுவ மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டடிருந்ததுடன் நகரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.

க.கிசாந்தன், அட்டன் கே.சுந்தரலிங்கம்

கூட்டு ஒப்பந்தம் கைவிடப்படுமா, கம்பனிகளின் நகர்வு என்ன?

கூட்டு ஒப்பந்த பொறிமுறைக்குள் இடம்பெற்ற சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் சம்பள நிர்ணய சபையை நாடவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. வேறு வழியின்றி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களும் இதற்கு இணங்கின. இதன் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று முடிவெடுத்தது சம்பள நிர்ணயசபை. இதனை வர்த்தமானியிலும் வெளியிட வைத்தது.

ஆனால் இதற்கு உடன்படாத 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வர்த்தமானி அறிவித்தலை தடைசெய்ய வேண்டுமென்பதே கம்பனி தரப்பின் முறைப்பாடு. மனுவை எற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அன்றைய தினம் தொழிற்சங்கங்கள் இம்மனுவிற்கு எதிராக ஆட்சேபணை மனுக்களை தாக்கல் செய்தன. அதன் பேரில் விசாரணையை எதிர்வரும் 5ஆம் திகதி (நாளை) வரை ஒத்திவைத்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.

விசாரணை முடியும் வரை 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதா? அல்லது இடைக்கால தடை விதிப்பதா என்னும் தீர்மானம் குறித்து நீதிமன்றம் அறிவிக்க இடமுண்டு. எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி மிகத்திறமை வாய்ந்த சட்டத்தரணிகள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்காக வாதிடப் போகிறார்கள். பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் எவ்வாறு ஈடுகொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே விளைவுகள் ஏற்படும். வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் எழுதப்படும். அந்தவகையில் மலையக தொழிற்சங்கங்களின் சார்பில் வாதிடப்போகும் சட்டத்தரணிகள் தமது பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் நானுஓயா, ரதல்ல தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை 1000 ரூபா வழங்கத் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருப்பதாகவும் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்கமறுத்ததே இன்றைய சிக்கல்களுக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார். தவிர, இத்தொழிற்சங்கங்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து விலகவேண்டும். மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் பிரவேசிக்க முன்வந்தால் அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அந்தஸ்து கொண்ட தொழிற்சங்கங்களான இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு (10 மலையக தொழிற்சங்கங்களின் இணைப்பு) கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக கூறியிருந்தன. ஆனால் அது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள ஏனைய தரப்பின் உடன்பாடு அவசியம். அப்படி இல்லாவிடில் தாமாகவே வெளியேறுவதை சம்பந்தப்பட்ட தரப்புகள் பகிரங்கப்படுத்த வேண்டும். ஆனால் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் இதுவரை பட்டவர்த்தனமாக எதனையும் அறிவிக்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவான 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்ற ஆவேச அறிவிப்புகளாகவே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக எழுப்பிய குரல்கள் அமைந்தன. அப்படியே அமுங்கியும் போயின.

ஆனால் இ.தொ.காவுக்கு இது பிடித்தமான சங்கதியாக இருக்க முடியாது. ஏனெனில் இ.தொ.கா.வின் அப்போதைய தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் தான் கூட்டு ஒப்பந்தத்ததின் சூத்திரதாரி. எனவே அதனைக் கைவிடுவது என்பது உசிதமாக இருக்கப் போவதில்லை. இ.தொ.கா 2016 களில் சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்யப்போவதாக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார். ஆனால் இறுதிவரை அவர் எதனையுமே செய்யவில்லை. கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்ளை தன் வசப்படுத்திக்கொள்ள ஒரு பொறி. அதனைக் கைவிடுவது என்பது சாதாரண விடயமாக இருக்காது.

பொதுவாக கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சாதகமான பல அம்சங்களை உள்ளடக்கவே செய்கிறது. போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் இன்றி சம்பள விவகாரத்தைக் கையாளும் வாய்ப்பு. இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர் நலன்கள் பாதுகாப்பு என்று நல்ல சமாச்சாரங்கள் இருக்கவே செய்கின்றன.

எனினும் கடந்த காலங்களில் குளறுபடிகள் இழுத்தடிப்புகள் ஏற்படவே செய்தன. இதற்குக் காரணம் ஒப்பந்த ஷரத்துக்களை உரியமுறையில் செயற்படுத்தாமையே ஆகும். இதற்கான அழுத்தங்களைக் கம்பனி தரப்புக்கு ஏற்படுத்துவதில் தொழிற்சங்க தரப்புகள் பலவீனமாகவே இருந்துள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும்வரை கூட்டு ஒப்பந்தம் பற்றிய ஒரு நம்பிக்கை இருக்கவே செய்தது. கம்பனி தரப்பை வழிக்குக் கொண்டுவரக் கூடிய ஆளுமையும் அனுபவமும் அவருக்கு இருந்தன. ஆனால் அந்த முதிர்வு நிலை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இல்லை என்கிறார்கள் நோக்கா்கள்.

ஜீவன் தொண்டமானைப் பொறுத்தவரை 1000 ருபா சம்பளத்தை. ஏதாவது ஒருவழியில் பெற்றுத்தந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கு சவாலாகவே 1000 ரூபா சம்பள விவகாரம் மாறிப்போயிருந்தது. எனினும் தொழிலாளர்களது சம்பள விடயம் வருங்காலத்தில் எவ்வாறு கையாளப்படப் போகிறது. அது எந்தவகையில் தொழிலாளர்களுக்குச் சாதகமான தன்மையை உள்வாங்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் சாணக்கியம் வெளிப்படும் என்பதே உண்மை.

தொழிற்சங்க தரப்பு இப்படி குழப்பத்தில் இருந்து விடுபட்டு தொலை நோக்கிலான ஒரு தீர்மானத்துக்கு வராத நிலைமையிலேயெ நீதிமன்றத்தில் வாதிடப் போகின்றன. ஆனால் கம்பனி தரப்பு என்ன செய்கின்றதாம்? அது ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது. அதனாலேயே சம்பள நிர்ணய சபையின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்துணையை நாடி இருக்கின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தாம் விலக வேண்டிவரும் என்னும் அச்சுறுத்தலுடன் தான் அது வாதங்களை முன்னெடுக்கும்.

ஆய்வாளர்களின் பதிவுகளின்படி வழக்கு இடம்பெறும் கால இடைவெளியைப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களை மேலும் பலவீனத்துக்குத் தள்ளி விடவே பயன்படுத்த முயலும். தற்போதைய நிலையில் தோட்டத் தொழிற்றுறையில் பெண்கள் மட்டுமே அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை வைத்து போராட்டங்கள் நடத்துவது எல்லாம் முன்னைய காலங்களைப் போல விளைவுகளை ஏற்படுத்தப்போவது இல்லை. இது கம்பனி தரப்புக்கும் தெரியும். மலையக தொழிற்சங்கங்களுக்கும் புரியும்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மீதான தமது நம்பிக்கையை சிறுகச்சிறுக இழந்து வருகிறார்கள். அத்துடன் மலையக தொழிற்சங்கங்களிடம் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கிடையாது. தமது அரசியல் இருப்புக்கான ஆதார கருவிகளாக மலையக மக்களை மாற்றியமைப்பது ஒன்றையே பல சங்கங்கள் கொள்கையாக கொண்டுள்ளன.

அந்த வகையில் பார்க்கப் போனால் கம்பனி தரப்பின் கை ஓங்கித்தான் இருக்கிறது. சம்பள நிர்ணய சபையோடு மோதுவது என்பது அரசாங்கத்தோடு மோதுவது தான். ஆனால் அதற்குத் தயாராகிய நிலையிலேயே அது கோதாவில் குதித்துள்ளது. கூட்டு ஒப்பந்தம் ரத்தாகும் பட்சத்தில் அது பல வகைகளிலும் கம்பனி தரப்புக்கே சாதகமாக அமையும். மீண்டும் பெருந்தோட்டக் கட்டமைப்பை தாம் விரும்பியபடி கையாள முழுமையாகவே வாய்ப்புக் கிடைக்கும். இதனால் தொழிலாளர்கள் அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம்.

பன. பாலா

21/4 தாக்குதல் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை!

21/4 தாக்குதலை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கவில்லை.எனவே, தாக்குதலின் பின்பலம் கட்டாயம் கண்டறியப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து, உடல் அவயங்களை இழந்தனர். இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்றிருந்தாலும் நல்லாட்சியின்போது நீதி கிடைக்கவில்லை. அரசுக்குள் இருந்துகொண்டு நீதிக்காக போராடினோம். அப்போராட்டம் பலனளிக்கவில்லை.

மேற்படி தாக்குதலை வைத்து பிரச்சாரம் செய்துதான் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார், திட்டமிட்ட குழுவினர் யார், நிதி உதவி வழங்கியது யார் என்பன உட்பட அனைத்து விடயங்களும் கண்டறியப்படவேண்டும். அத்திசையை நோக்கி அரசு பயணிப்பதாக தெரியவில்லை.

அதேவேளை, மதத்தை அடிப்படையாகக்கொண்டு அழுத்தங்களை பிரயோகிக்கும் தரப்புகளுடன் கூட்டணி வைக்கப்படக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பரண் பலகை முறிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பலி: கம்பளையில் சோகம்!

0
தனது வீட்டின் பரண் (பொருட்கள் வைக்கும் மரத்தட்டு) மீது தந்தை ஏறியபோது, பலகை முறிந்து கீழே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச்...

கொட்டக்கலையில் அதிசயம்: உச்சியில் அல்லாமல் தண்டின் நடுப்பகுதியை பிளந்து வெளிவந்த வாழைக்குலை!

0
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டக்கலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு வாழை மரம்...

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...