Home Blog Page 3551

உலகளவில் 13 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 49 லட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் 13 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.48 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 லட்சத்து  40 ஆயிரத்து 729 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.24 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96 ஆயிரத்துக்கு 700-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சச்சின் மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

” உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

நமது உலகக் கோப்பை 10 வது ஆண்டு நிறைவையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.” – என்றனர்.

வேன் மோதியதில் மூன்று வயது குழந்தை பலி! பதுளையில் சோகம்!!

மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்றின் மீது வேனொன்று மோதியதினால், அக்குழந்தை படுகாயமுற்ற நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் சிகிச்சை பயனளிக்காது மரணமானார்.

இச்சம்பவம் 02-04-2021 முற்பகல், பதுளை – முடகமூவை என்ற இடத்தில்  இடம்பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியின் முடகமூவ என்ற இடத்தைச் சேர்ந்த நெத்மி நிசன்சா என்ற மூன்றரை வயதுடைய பெண் குழந்தையே மரணமானவராவார்.

இக்குழந்தை வீட்டின் முன்னால் பாதையில் விளையாடிக் கொண்டிருந்த போதே, அப்பாதையில் பயணித்த வேன், குழந்தை மீது மோதியுள்ளது.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, வேன் சாரதியின் கவனயீனத்தினால் இவ்விபத்து இடம்பெற்றதாகக் கூறிய பொலிசார், வேன் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

வேன் சாரதி விசாரணையின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

பசறை விபத்து – பஸ் சாரதிக்கு மறியல் நீடிப்பு! லொறி சாரதி பிணையில் விடுவிப்பு!!

பசறை, 13வது மைல் கல்லருகே விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதியும், விபத்திற்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொறியின் சாரதியும், பசறை நீதிவான் நீதிமன்றத்தில் 01-04-2021 நேற்று பிற்பகல் பசறைப் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆஜர்படுத்தப்பட்ட பஸ் சாரதியை, எதிர்வரும் 8ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும், லொறிச் சாரதியை ஐந்து இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரரப்பிணைகளில் விடுவிக்கும்படியும், பசறை நீதிவான் நீதிபதி சமிந்த கருணாதாச உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிபதி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட லொரிச் சாரதியை, எதிர்வரும் 8ந் திகதி மீளவும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்தார்.

கடந்த 20ந் திகதி காலை, பசறை 13வது மைல் கல்லருகே மேற்படி தனியார் பஸ் விபத்திற்குள்ளாகியது. இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகினர். இவர்கள் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களில் ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதி மீது, பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதால், அது தொடர்பான தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறைப் பொலிசார், நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பொறுப்பற்ற வகையில் பஸ்சை செலுத்தியமை, கையடக்கத் தொலைபேசியை பாவித்தமை, கடும் வேகம், சாரதி அனுமதிப்பத்திரமின்மை, பஸ் சேவை கால அட்டவணைக்குப் புறம்பாக பஸ்சை செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்தும், பசறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம். செல்வராஜா, பதுளை

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்!

நுவரெலியா ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் கிறகறி வாவிக்கரையில் நேற்று (1-4-.2021) வியாழக்கிழமை முப்படையினரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடனும் கலை கலாசார நிகழ்வுகளுடனும் கோலாகலமாக ஆரம்பமானது.

நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ரமேஸ்வரன், நுவரெலியாபிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜா, மாவட்ட செயலாளர் நந்தனகலபட, நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகம சூரிய, பிரதி நகர முதல்வர் யதர்சனா உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.

நேற்று ஆரம்பமாகிய வசந்தகால நிகழ்வுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கலை கலாசார நிகழ்வுகளும் குதிரைப்பந்தய போட்டி, மலர் கண்காட்சி விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக ஆரம்ப நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு நடைபெறவில்லை. அதேபோல வழமையாக நடைபெறும் காணி வேல் களியாட்ட விழாவும், மோட்டார் காரோட்டப் போட்டி, இசை நிகழ்ச்சியும் இம்முறை நடைபெறாது என்பதும் குறிப்பிடதக்கது.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ,மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்திரலால் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது கஞ்சா பெக்கெட் செய்யப்பட்ட நிலையில் 23 பெக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் பெக்கெட் செய்வதற்காக பயன்படுத்தும் இலக்ரோனிக் மெஷின் ஒன்றினையும், பொலித்தீன் சிலவற்றையும், இலக்ட்ரோனிக் தராசு ஒன்றிணையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆயர் யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும்!

இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 01.04.2021 நேற்று தனது 80ஆவது வயதில் இறைபதமடைந்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. நலிந்த மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியடைந்து விட்டது. மனித உரிமைகளின் காவலராக விளங்கிய துணிவுமிக்க ஒரு தலைவர் இன்று நீங்காத் துயில் கொண்டு விட்டார். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!

இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம் சார்ந்த தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். ஒரு மறைமாவட்டத்தில் ஆயர் செய்ய வேண்டிய பணிகளை அவர் முழுமையான உற்சாகத்தோடு செய்தார். திருப்பலி, திருவிழாக்கள், பங்குத்தரிசிப்புக்கள், ஆலோசனைகள், கூட்டங்கள், மாநாடுகள், ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள், ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.

இவர் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் மறைமாவட்டத்தை ஆன்மீக, ஒழுக்க, சமூக, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடுகளைக் கூட்டி குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்.

இவருடைய காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பல புதிய பங்குகள் உருவாக்கப்பட்டன. இவர் மறைமாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வுபெறும்போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன.

யுத்த சூழ்நிலையில் பல ஆலயங்கள், பங்குமனைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பல ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் கால நீட்சியினால் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளைப் பெற்று புதிய ஆலயங்களை, புதிய பங்குமனைகளைக் கட்டி எழுப்ப இவர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழி செய்தார்.

இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகளில் புதிய கன்னியர் மடங்களையும் ஏற்படுத்தி மக்களை ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் வளர்க்கப் பாடுபட்டார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.

குருக்கள் துறவியர் நலனில் அக்கறையோடு செயற்பட்டார். பொதுநிலையினரின் உருவாக்கத்தில் அதிக கரிசனை எடுத்தார். திருச்சபையின் திருவழிபாடுகளை திருச்சபை ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடத்தவேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவ்வாறு ஓர் ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டம் சார்ந்த கடமைகளில் அவர் அதிக ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு உழைத்தார். இதை விட இலங்கை ஆயர் பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார்.

கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார். சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமல் போனோர் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார். யுத்தத்தால் தமது இடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்.யுத்தத்தால் தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்கள் தொழில்களை ஆரம்பிக்க வேண்டிய உதவிகளைச் செய்தார்.

யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார். யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.

விமானக் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல், கண்ணிவெடித் தாக்குதல்கள் என எப்படியான அனர்த்தங்கள் இடம்பெற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முதல் ஆளாக களத்திற்கு விரைந்து சென்றார். காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். இழப்பின் சோகத்திலும், அச்சத்திலும், ஆபத்திலும் இருந்த மக்களுக்கு தனது பிரசன்னத்தினால் ஆறுதலைக் கொடுத்தார். இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள்மேல் அக்கறையுள்ள ஓர் நல்ல ஆயனாக, அவர் அனர்த்தங்களின் செய்தியை அறிந்து ஆபத்துக்கள் மத்தியில் களத்திற்கு விரைந்து சென்றார். போர்ச் சூழல் நிலவிய காலத்தில் ஆயர் யோசேப்பு ஆண்டகை குரலற்ற தமிழ் மக்களின் குரலாக ஒலித்தார். உண்மைகளை எடுத்துக்காட்டிய, நீதியை வலியுறுத்திய அவருடைய குரல் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஓங்கி ஒலித்தது.

ஆட்சியில் இருந்த அரசுத் தலைவர்களை, அமைச்சர்களை மற்ற ஆயர்களுடனும், தனியாகவும் காலத்துக்குக் காலம் சந்தித்து மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். தன்னைச் சந்திக்க வரும் அரசாங்க அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கியநாடுகள் சபையின் பல்வேறு பிரிவைச் சார்ந்த பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு களநிலமைகளை தெளிவாக விளங்கப்படுத்தினார். இவ்வாறு அவர் குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தார்.

ஆயர் யோசேப்பு ஆண்டகை இயல்பாகவே இறைவாக்கினருக்குரிய துணிவைப் பெற்றிருந்தார். துன்புறும் மக்களுக்காக இரங்கும் இரக்க உள்ளத்தையும் அவர் பெற்றிருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக காலத்தின் தேவைக்கு பதில் அளிக்க வேண்டிய ஒரு நல்ல திருச்சபைப் பணியாளனுக்குரிய தெளிவையும் அவர் கொண்டிருந்தார்.

தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்த நல்லாயன் இயேசுவை அவர் தன் கண்முன் கொண்டிருந்தார். ஆயர் யோசேப்பு ஆண்டகை பணி செய்த காலம் ஓர் இக்கட்டான காலம். இப்படியான உயிராபத்து மிக்க ஒரு காலகட்டத்தில்தான் ஆயர் யோசேப்பு ஆண்டகையின் பணி நடைபெற்றது.

ஆயர் அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகள், நிவாரணம் வழங்கல், மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயலாற்றினார். விடுதலைப் புலிகள், தமிழ் அரசியல் தலைவர்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினருடனும் அவர் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பல்வேறு தொடர்பாடல்களை, கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்தார். அதேபோன்று அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடும் நெருங்கியவிதமாகச் செயலாற்றினார். இதன் காரணமாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புக்களை, விமர்சனங்களை, கண்டனங்களை எதிர்கொண்டார்.

1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப் பகுதியில் அவர் சுகவீனமடையும் வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கி வந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை திருத்தந்தை ஏற்றுக் கொண்டார்.

ஆயர் அவர்கள் மக்கள் பணியில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். இரவு பகல், மழை, வெயில் பாராது நீண்ட பயணங்களை மேற்கொண்டார். கண் துஞ்சாது, பசி நோக்காது கருமமே கண்ணாகச் செயற்பட்டார்.

2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின் போது மன்னார் தமிழ்ச் சங்கம் ‘இனமான ஏந்தல்’ என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

ஈழத்துக் கத்தோலிக்க திருச்சபை, இன்னும் குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயர் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விழைய வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடு, உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றைய, நாளைய தலத்திருச்சபைக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

இராஜதந்திர பொறிமுறையிலும் ராஜபக்ச அரசு “பெயில்”

சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், இராஜதந்திர பொறிமுறையிலும் தற்போதைய அரசு தோல்வி கண்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உப தலைவரான கபீர் ஹாசிம் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டியெழுப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்திருந்தார். ஆனால் எண்ணைய்க்குகூட நாட்டில் பாதுகாப்பு இல்லை. நெல் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.

மறுபுறத்தில் 21/4 தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரி கண்டறியப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவே செயற்பட்டது. ஆக தேசிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இரண்டிலுமே தோல்வி கண்ட இந்த அரசு, தற்போது இராஜதந்திர நகர்விலும் தோல்வியடைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களிலும், தூதரகங்களிலும் தமக்கு நெருக்கமானவர்களையும், அமைச்சர்களின் உறவினர்களையும் நியமித்துள்ளது. அனுபவம் வாய்ந்தவர்கள் குறைவு. வெளிவிவகாரக் கொள்கை உரிய வகையில் முகாமை செய்யப்படாமையும் ஜெனிவாத் தோல்விக்கு ஓர் காரணமாகும்.” – என்றார்.

மாகாண தேர்தலை மக்கள் கோரவில்லை இந்தியாவே ஆர்வம்காட்டி வருகின்றது

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் இந்தியாவே தற்போது கூடுதல் அக்கறை காட்டிவருவதாக ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளின் ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைகளுக்கான தேர்தல் ஈராண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அப்படி இருந்தும் குறித்த தேர்தலை விரைவில் நடத்துமாறு மக்கள் கோரவில்லை. அதனை வலியுறுத்தி போராட்டமும் நடத்தவில்லை.

மாகாணசபைத் தேர்தல் நடைபெறவில்ல என்பதால் மாகாணசபை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை. மாகாணசபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படவில்லை. இந்நிலையில் இரு தரப்புகளே தேர்தலை கோருகின்றன.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், எதிர்காலத்தில் மாகாணசபைகளுக்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களுமே தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். அடுத்ததாக இது விடயத்தில் இந்தியா ஆர்வம் காட்டிவருகின்றது.

அண்மையில்கூட வடக்குக்கு சென்றிருந்த இந்திய தூதுவர், அங்குள்ள அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து, மாகாண தேர்தலுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி தேர்தலை நடத்திக்கொள்வதிலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலும் இந்தியாவுக்கு உள்ள அதிக அக்கறை புலப்படுகின்றது.” – என்றார்.

பம்பரகலை தோட்டத்தில் தீ விபத்து – 13 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு,  பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்ட போது வீட்டில் .இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பல மணி நேரத்திற்கு பின்பு தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...